மும்பை பெண் மருத்துவருக்கு நவீன சிகிச்சை மூலம் மீண்டும் பார்வைத்திறனை வழங்கி டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
மும்பையை சேர்ந்த 44 வயதான மகப்பேறியல் பெண் மருத்துவர் ஒருவருக்கு, கடுமையான கண் அழுத்த நோய் (குளுக்கோமா) மற்றும் தவறாகப் பொருத்தப்பட்ட செயற்கை லென்ஸ் காரணமாக 2 கண்களிலும் பார்வை முற்றிலும் பறிபோயிருந்தது.
ஏற்கெனவே பல இடங்களில் அறுவை சிகிச்சைகள் செய்தும் பலன் கிடைக்காத நிலையில், அந்த மருத்துவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையை அணுகினார்.
இங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஒரே அமர்வில் 3 முக்கிய சிகிச்சைகளை ஒருங்கிணைத்து மேற்கொண்டனர். குறிப்பாக ‘5F-ISHF’ எனும் நவீன உத்தியின் மூலம் புதிய லென்ஸ் பொருத்தப்பட்டது. இதனுடன் கண்களின் முழுமையான குறைபாடுகளை சரிசெய்வதற்காக, கருவிழி மாற்று சிகிச்சை மற்றும் கண் பாவை சீரமைப்பு ஆகியவையும் ஒரே சிகிச்சை அமர்வில் செய்யப்பட்டன.
அறுவை சிகிச்சை முடிந்த உடனேயே, அந்தப் பெண் மருத்துவருக்கு இடது கண்ணில் 6/24 என்ற அளவில் கணிசமான பார்வைத்திறன் திரும்பக் கிடைத்துள்ளது.
இதுகுறித்து டாக்டர் அகர்வால்ஸ் குழுமத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் அஸ்வின் அகர்வால் கூறும்போது, “பல ஆண்டுகளாகப் பார்வையின்றி அவதிப்பட்ட ஒரு சக மருத்துவ நிபுணர், மீண்டும் தனது மருத்துவப் பணிக்குத் திரும்புவதைப் பார்ப்பது எங்களுக்குப் பெருமிதம் அளிக்கிறது.
கண்ணின் சிதைந்த அமைப்பை சீரமைத்து, புதிய லென்ஸை பாதுகாப்பாகப் பொருத்தியது ஒரு மிகப்பெரிய சவாலாகும்” என்றார். தொடர்ந்து ‘5F-ISHF’ என்ற நவீன தொழில்நுட்பத்தை உருவாக்கியவரும், அறுவை சிகிச்சையை முன்னின்று நடத்தியவருமான டிஏஆர்சிஎஃப் இயக்குநர் டாக்டர் சூசன் ஜேக்கப் கூறும்போது, “நோயாளிக்கு 2010-ம் ஆண்டிலிருந்தே குளுக்கோமா பிரச்சினை இருந்தது.
கண்புரைக்கான அறுவை சிகிச்சை மற்றும் தாங்குதிசு நீக்கல் சிகிச்சை போன்றவற்றை பிற மருத்துவமனைகளில் செய்துகொண்ட போதும், அவரது பார்வைத்திறன் குறைந்து கொண்டே போனது. ஏறக்குறைய அவரது பார்வைத்திறன் முழுமையாக இழந்திருந்தது.
அவருக்கு முன்பு பொருத்தப்பட்டிருந்த லென்ஸ் நகர்ந்து கண்ணின் உட்பகுதியை அழுத்தியதே பார்வை இழப்புக்கு முக்கிய காரணம். நாங்கள் அந்த பழைய லென்ஸை அகற்றி, ‘5F-ISHF’ முறையில் புதிய லென்ஸை பாதுகாப்பாகப் பொருத்தி பார்வையை மீட்டோம்” என்றார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பில், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவ சேவைகள் மண்டலத் தலைவர் டாக்டர் சவுந்தரி, விட்ரியோ ரெடினா துறையின் கிளினிக்கல் லீட் மற்றும் தலைவருமான மனோஜ் காத்ரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.














