முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் 140 கி.மீ. பாதயாத்திரை: துவாரகா கோயிலுக்கு செல்கிறார்

0
205

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30-வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140 கி.மீ. தூரம் பாதயாத்திரையாக சென்று துவாரகா கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார்.

நலிவுற்ற வனவிலங்குகளுக்காக வந்தாரா என்ற முகாமை ஆனந்த் அம்பானி அமைத்துள்ளார். பிரதமர் மோடியும் சமீபத்தில் அங்கு வந்து வனவிலங்குகளை பார்த்து ரசித்தார். அந்த முகாமுக்கு மத்திய அரசின் விருதும் கிடைத்துள்ளது.

ஆனந்த் அம்பானியின் பிறந்தநாள் ஏப்ரல் 10-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதைமுன்னிட்டு, ஜாம் நகரிலிருந்து துவாரகாவுக்கு 5 நாள் நடைப்பயணமாக செல்ல ஆனந்த் அம்பானி திட்டமிட்டார். இதற்காக, அவர் ஒவ்வொரு இரவும் 10-12 கி.மீ. தூரம் நடந்து செல்ல உள்ளார். பலத்த பாதுகாப்புக்கு இடையே அவர் இந்த பாதயாத்திரயை தனது பணியாளர்களுடன் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற பாதயாத்திரையின்போது கூண்டில் அடைக்கப்பட்ட கோழிகளைக் கண்டவுடன் தனது யாத்திரையை சிறிது நேரம் நிறுத்தினார். இதையடுத்து, கூண்டிலிருந்து ஒரு கோழியை மட்டும் கையில் பிடித்துக் கொண்ட ஆனந்த் அம்பானி, எஞ்சிய கோழிகளுக்கான விலையை உரிமையாளரிடம் கொடுத்துவிட்டு அனைத்தையும் மீட்குமாறு கேட்டுக்கொண்டார். அவரின் உயிர்மை நேய செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதனிடையே ஆனந்த் அம்பானி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ கடவுள் துவாரகாதீசர் மீது இளைஞர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். அவரை நினைத்து எந்த காரியத்தை செய்தாலும் அது நிச்சயமாக எந்த தடையும் இன்றி நிறைவேறும். கடவுள் இருக்கும்போது நாம் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. அடுத்த 2-4 நாட்களில் துவாரகா சென்றடைவோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here