நான் சின்னத்திரை தொடர்களில் நடித்துக்கொண்டிருந்த நேரத்தில், அதை விட்டுவிட்டு முழு நேரமாக சினிமாவில் கவனம் செலுத்த இயக்குநர் ஒருவர் அறிவுரை கூறியிருந்தார் என்று ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன். அதனால் இனி சினிமாதான் என்று முடிவு செய்திருந்தேன்.
அது 2004-ம் ஆண்டு. எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. “நான் பாண்டியன்னு புரொடக் ஷன் மேனேஜர் பேசுறேன்” என்றார். “சொல்லுங்க தம்பி“என்றேன். “பிரகாஷ்ராஜ் சாரோட டூயட் மூவிஸ் நிறுவனத்துல இயக்குநர் ராதாமோகன் ஒரு படம் பண்றார்.
அதுல நடிக்கிறது தொடர்பா உங்ககிட்ட பேசணும், ஆஃபீஸுக்கு வர முடியுமா?” என்றார். பிரகாஷ்ராஜ் அலுவலகத்துக்குச் சென்றேன். இயக்குநர் ராதாமோகனை சந்தித்தேன். “அழகிய தீயே என்றொரு படம். அதுல ஒரு திருநெல்வேலி அண்ணாச்சி கேரக்டர் இருக்கு.
காமெடியும் இருக்கு, கண்ணீர் வர்ற மாதிரி சீனும் இருக்கு. உங்க சீரியல் எல்லாம் பார்த்திருக்கேன். உங்களுக்கு காமெடியும் வருது, சோகமும் வருது, சென்டிமென்ட்டாவும் பண்றீங்க. அதனால இதுல அந்த அண்ணாச்சி கதாபாத்திரத்தை நீங்கதான் பண்ணணும்” என்றார். நான் ‘`சரி’’ என்றேன்.
அப்போது உள்ளே இருந்து பிரகாஷ் ராஜ் மெதுவாக, காமெடியாக, நட்போடு எட்டிப்பார்த்தார். “நான் வணக்கம் சார்” என்றேன். “இந்த சார் எல்லாம் வேண்டாம், சும்மா ஜாலியா பேசுவோம்” என்றார்.
பிறகு அடுத்த நொடியே பல நாள் பழகியவர் போல பேச ஆரம்பித்து விட்டார். ‘அழகிய தீயே’ படத்தில் மளிகைக்கடை அண்ணாச்சி கதாபாத்திரம் பண்ணினேன்.
அதில் பிரசன்னா, குமரவேல், டிஸ்கோ சாந்தியின் தம்பி ஜெயவர்மா, பாலான்னு ஒரு பையன்… இப்படி எல்லோரும் ஜாலியாக நடித்தோம். அந்தப் படத்துக்கு விசு என்ற ஒளிப்பதிவாளர் பணியாற்றினார்.
படத்தில் ஜெயவர்மா இறந்து போகிற மாதிரி காட்சி. “அந்த காட்சியை எடுக்கும்போது எனக்கு முதல்லயே சொல்லிடுங்க” என்று இயக்குநரிடம் சொல்லி விட்டேன். அதே போல் சொன்னார்கள். நான் முந்தைய நாளிலேயே அந்த மூடுக்கு சென்று விட்டேன். சூர்யா மருத்துவமனையில் படப்பிடிப்பு.
எனக்கு அந்த காட்சியில் டயலாக் இல்லை. நான் ராதாமோகன் சார்ட்ட போய், “நான் ரெண்டு டயலாக் பேசிக்கலாமா?” என்று கேட்டேன். அவர் நான் கண்ணீரோடு நிற்பதை பார்த்துவிட்டு, “தாராளமா பேசுங்க” என்றார்.
நான் அருகில் போய் பார்த்துவிட்டு அழுதுகொண்டே, “ஏல ஐயா, பார்த்துப் பார்த்து உடம்பை ஏத்துனது பாடையில போறதுக்கால?’ என்று ஒரு வசனம் பேசினேன். ஒளிப்பதிவாளர் விசு, கண்ணைத் துடைத்துக்கொண்டு, ‘`இதை என்னால ஷூட் பண்ண முடியாது, வேற யாராவது பண்ணுங்க” என்று போய்விட்டார்.
அவருடைய அசிஸ்டன்ட்டுதான் அதை எடுத்தார். ராதா மோகன் சாரும் அந்த காட்சி எடுக்கும் போது கண்ணீர் விட்டு அழுதார். பிரகாஷ் ராஜ் படம் பார்த்துவிட்டு அவ்வளவு பாராட்டினார். அந்தப் படத்தில் எனக்கு மிகப்பெரிய பேர் கிடைத்தது.
நான் அதில் பேசிய திருநெல்வேலி பேச்சு வழக்கை பார்த்து விட்டு, “அண்ணாச்சி, திருநெல்வேலில உங்களுக்கு எந்த பக்கம்?” என்று பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.
பிறகு 2006-ம் ஆண்டு ‘மொழி’ திரைப்படம். ராதா மோகன் சார் எப்போதும் அந்த கதாபாத்திரத்தை தெளிவாக ஆரம்பத்திலிருந்து முடிவு வரை சொல்லி, அதை நம் மனதுக்குள் ஏற்றிவிடுவார். அப்படித்தான் `மொழி’ படத்தின் புரொஃபஸர் ஞானபிரகாசம் கதாபாத்திரம்.
“அதுக்கு கையை இப்படி வச்சுக்கலாம், எந்த நேரமும் ஒரே சிந்தனையிலேயே இருக்கிறவர், பையன் இறந்து போனதுல இருந்து அவர் மனரீதியாக ஸ்டக் ஆயிட்டார். பழைய புஸ்தகங்களா படித்துக்கொண்டு இருப்பார், நிறைய இங்கிலீஷ் பேசுவார்” என்று முதலிலேயே சொல்லிவிட்டார்.
அதில் பிருத்விராஜ், பிரகாஷ்ராஜ், ஜோதிகா,பிரம்மானந்தம் போன்றோருடன் நடித்தேன். வழக்கமாக பிரம்மானந்தம் ஐயாவுக்கு நான்தான் தமிழில் டப்பிங் பேசுவேன். இந்தப் படத்தில், குமரவேல் பேசினார்.
‘மொழி’ படத்தில் என் கதாபாத்திரம் வரும்போது திரையரங்கில் ரசிகர்கள் அப்படி ரசித்தார்கள். அந்த படத்துக்காக இரவு முழுவதும் தூங்காமல் அப்படியே படப்பிடிப்புக்கு போவேன். தூக்கக் கலக்கமும், கண்ணில் டயர்ட்னஸும் அந்த பிரமையும் இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி நடித்தேன்.
அந்தப் படத்தின் புரொஜெக் ஷன் போடும்போது கலைஞர் அப்பா, வைரமுத்து சார் எல்லாரும் வந்து பார்த்திருக் கிறார்கள். பார்த்தவுடன் ராதாமோகன் சார் வெளியில் வந்து, ‘ஐயா படம் எப்படி?’ என்றதும் கலைஞர் அப்பா ‘காவியம்’ என்றிருக்கிறார்.
“அந்த பேராசிரியரா நடிச்சிருக்கிற பையன்… முத்துப்பேட்டை சோமண்ணன் மகன்’’ என்று கலைஞர் ஐயா சொல்லி இருக்கிறார். பிறகு ராதாமோகன் சார், எனக்கு போன் பண்ணி, ‘`அப்பாவை கலைஞர் ஐயா சொல்றாரே?” என்று ஆச்சரியமாகக் கேட்டார்.
“அப்பா பெரிய நிலக்கிழார். கலைஞர் ஐயா, அப்பாவை அண்ணன் என்றுதான் கூப்பிடுவாங்க” என்றேன். “அப்படியா? அப்பா நாடக நடிகர் என நான் நினைத்தேன்” என்றார். இந்தப் படத்துக்காக தமிழக அரசின் 2007-ம் ஆண்டுக்கான சிறந்த குணச்சித்திர நடிகர் விருது, எனக்கு கிடைத்தது.
அதை கலைஞர் அப்பா கையால் வாங்கினேன். ‘மொழி’ படத்தில் எனக்குப் பெரிய பெயர் கிடைத்ததற்கு காரணம், இயக்குநர் ராதா மோகன், தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ், உடன் நடித்த நடிகர்கள், அந்த தொழில்நுட்ப கலைஞர்கள், ஒளிப்பதிவாளர் விசு, வசனம் எழுதிய விஜி… இவர்கள் எல்லோரும்தான்.
