Home சினிமா செய்திகள் Friends 25: விஜய் – சூர்யா நட்பும், கிட்டிய திரை அனுபவமும்

Friends 25: விஜய் – சூர்யா நட்பும், கிட்டிய திரை அனுபவமும்

0

தமிழக முதல்வராகிவிட்டார் விஜய். அவருடன் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் இணைந்து நடித்த சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் வசூல் நட்சத்திரம். இருவரும் முதன்முதலில் இணைந்து நடித்த ‘நேருக்கு நேர்’ படத்தில் எதிரும் புதிருமாக நடித்திருந்தாலும் அவர்களைச் சிறந்த நண்பர்களாகச் சித்தரித்தது 2001-இல் வெளிவந்த ‘ப்ரண்ட்ஸ்’.

2008-இல் பிறந்த நான், என் பள்ளிக் காலத்தில் திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டேன். பின்னர் 2020-இல் கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நாடே ஊரடங்கில் சுருண்டபோது, பள்ளிக்குச் செல்ல வாய்ப்பின்றி வீட்டில் திரைப்படங்களில் மூழ்கிக் கிடந்தேன். தொலைக்காட்சிகளில் ஓடிடி தளங்களில் பார்த்தது போதாமல், அப்பாவின் திறன்பேசியிலும் படங்களைப் பார்த்த நாள்கள் அவை. அப்படித்தான் 2001 பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘ப்ரண்ட்ஸ்’ படத்தை யூடியூபில் பார்த்தேன்.

எனக்கு வீட்டைச் சுற்றி 6 நெருக்கமான நண்பர்கள் உண்டு. அவர்களோடு மிதிவண்டிச் சாகங்களில் ஈடுபடுவது, திருவாரூர் நகரைச் சுற்றி வருவது என்று மகிழ்ச்சியான தருணங்கள் நிறைய. ஆனால், ஊரடங்கு அந்த நண்பர்களுடன் நெருங்க முடியாத பெரிய நெருக்கடியைத் தந்துவிட்டது. அப்போதுதான் நண்பர்களின் தோழமை, அவர்களின் அருகாமை, அவர்கள் காட்டிய அன்பு எல்லாவற்றுக்கும் ஊரடங்கு பெரும் தடுப்புச் சுவர்போல் ஆகிவிட்டது. நட்பின் நன்மையை, அதனால் விளையும் மகிழ்ச்சியை ஊரடங்கு உணர வைத்தது. இந்த ஊரடங்கு முடிந்து எப்போது அவர்களைப் பார்க்கலாம் என்று ஏங்கிக் கொண்டிருந்தபோதுதான் ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் பார்த்தது எனக்கு ஓர் ஆறுதலாக அமைந்தது.

விஜய் – சூர்யா ஆகிய இருவரையும் அந்த 12 வயதில் நான் அறிந்திருந்தாலும் அவர்கள் இருவரையும் நெருக்கமான நண்பர்களாக ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் பார்த்தபோது நாமும் இவர்களைப்போல் பெரிதாக வளர்ந்த பிறகு என்னுடைய நண்பர்களைப் பிரியாமல் இருக்க வேண்டும் எனத் தோன்ற வைத்தது.

‘நட்பு என்றால் என்ன?’ என்கிற கேள்விக்குப் பல பதில்கள் இருக்கலாம். ஆனால் ஒரு நல்ல திரைப்படம் நட்பின் ஆழத்தைப் புரிய வைத்தால், அது ஒரு சாதாரணத் திரைப்படமாக இருக்க முடியாது என்று ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் உணர வைத்தது. அந்தப் படத்தின் தொடக்கக் காட்சியிலேயே அந்த உணர்வைப் பெற்றேன். 12 வயது பையன்களாக விஜய்யும் சூர்யாவும் இருக்கும்போது, விஜய் தனது செல்வச் செருக்கால், சூர்யாவையும் அவனுடைய தம்பி மற்றும் நண்பன் ரமேஷ் கண்ணாவை அவமானப்படுத்துவான்.

தீபாவளி நாளில் விஜய் பட்டாசு வெடிப்பதை ஆர்வமுடன் வேடிக்கை பார்க்கும் சூர்யா, சூர்யாவின் தம்பி, ரமேஷ் கண்ணா ஆகியோர் மீது சரவெடியைக் கொழுந்தி போடுவான் விஜய். இதனால், விஜய்யை விட்டு எப்போதும் சூர்யாவும் தம்பியும் நண்பனும் விலகியிருப்பார்கள். ஆனால், எதிர்பாராதவிதமாக விஜயின் தங்கை, ஆற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடுவாள். அதைப் பார்த்துப் பதறிப்போகும் சூர்யா, சிறிதும் யோசிக்காமல் தண்ணீரில் குதித்து அவளைத் தூக்கிக் கொண்டு ஓடி, மருத்துவமனையில் சேர்த்து அவள் உயிர் பிழைக்கக் காரணமாக இருப்பான். இதை அறிந்ததும், விஜய், தனது ஈகோவை கைவிட்டு, அவர்களை நண்பர்களாக அணைத்துக்கொள்வான்.

இந்தக் காட்சியுடன் நெகிழ்ச்சியாகத் தொடங்கும் படம், நட்பின் ‘ரோலார் கோஸ்டர்’ ஆக மாறி, ஒப்பந்தக்காரர் நேசமணியாக வரும் வடிவேலுவின் ‘உடல் மொழி’ மற்றும் வசன நகைச்சுவை பன்ச்களால் அவரும் அவரிடம் எடுபிடிகளாகத் தொற்றிக்கொள்ளும் நம் நாயகர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்களும் ‘நான்ஸ்டாப்’ ஆக நம்மைச் சிரிக்க வைத்து, ஒரு நெகிழ்ச்சியான க்ளைமாக்ஸுடன் முடியும்.

இந்தப் படத்தின் கதையில் காதலும் நட்பும் ஒருதலைக் காதலுக்குள் ஒளிந்திருக்கும் வன்மமும் ஆழமான மனக்காயங்களைக் கடந்து உயிர் நண்பன் மீது வைத்திருக்கும் நட்பின் ஆழமும் திரைக்கதையின் கதாபாத்திர வடிவமைப்பிலும் காட்சிகளிலும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்.

இந்தத் திரைப்படத்தின் மிகப் பெரிய பலம் ‘நேசமணி & கோ’வின் நகைச்சுவை என்று நெட்டிசன்கள் உரையாடுவதை வாசிக்கும்போதெல்லாம், அதைவிட நண்பர்களின் கதையே என்னை ஆழமாகப் பாதித்தது என்று சொல்லமுடியும். இது நகைச்சுவை பகுதி என்பது, காதல் காட்சிகளுக்குப் பக்கபலமாகவும் சீரியஸான நண்பர்கள் கதாபாத்திரத்தை நகைச்சுவைக்குள் மூழ்க வைத்து பின்னர் வாழ்க்கையின் நெருக்கடியான தருணங்களுக்குள் அவர்கள் மூழ்கி எவ்வாறு மீள்கிறார்கள் என்பதைக் காட்டிய விதம் உண்மையாகவே மலையாள இயக்குநர் சித்திக்கின் கதை சொல்லும் திறனைக் காட்டியது.

என்றாலும் நானும் 2020-இல் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தை முதன்முதலில் பார்த்தபோது வடிவேலு ஏற்று நடித்த நேசமணி கதாபாத்திரம்தான் என்னை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது. அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் சீரியஸான மையக் கதை கொண்ட இந்தப் படத்துக்குப் பெரிய ‘ரீலீஃப்’ ஆக இருந்தது. இன்றும் நேசமணி & கோவின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களிடையே பிரபலமாக இருப்பதற்குக் காரணம், அவை எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய கிளாசிக் தன்மையைப் பெற்றிருப்பதுதான்.

நேசமணியைப் போலவே என்னுடைய நண்பர்களில் சிலர், ‘இமிட்டேட்’ செய்து பேசத் தொடங்கியது, அந்தப் படத்தில் அவர் செய்த நகைச்சுவையின் தாக்கம் என்றால், நண்பர்களிடம் எவ்வளவு பொறுப்பாக நடந்துகொள்ளவேண்டும், அவர்கள் மீது எவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என என்னுடைய சொந்த நண்பர்களையும் ஊரடங்கு காலத்தில் நினைத்துப் பார்க்க வைத்துவிட்டது.

இன்றும் யாராவது என்னிடம் ஒரு நல்ல தமிழ் திரைப்படத்தைப் பரிந்துரைக்கச் சொன்னால், தயக்கமின்றி ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படத்தையே சொல்வேன்.

தூய்மையான நகைச்சுவை, போலித்தனமற்ற உண்மையான மனித உணர்ச்சிகள், அவற்றைச் சுமந்து வரும் சிறந்த கதாபாத்திரங்கள், அவற்றைச் சிறப்பாக வெளிப்படுத்தி நடித்த விஜய் – சூர்யா – தேவயானி, விஜயலட்சுமி, சார்லி, ரமேஷ்கண்ணா, ராதா ரவி உள்ளிட்ட நடிகர்கள் என உண்மையான நட்பு மற்றும் குடும்பத்தின் வலிமையை அதன் உள்ளார்ந்த அழகை ஒருங்கே தன்னுள் திரட்டி வைத்திருந்த இத்திரைப்படத்தை எனக்குப் பிடித்தமான படங்களின் பட்டியலில் சேர்த்துவிட்டேன். ‘ப்ரண்ட்ஸ்’ படத்துக்கு இப்படியொரு இடம் கொடுக்க இளையராஜாவின் இசையும் மிக முக்கியமான காரணம்.

தமிழ் சினிமாவில் ‘நட்பின் உலக’கத்தை கதைக் களமாகக் கொண்ட படங்களின் பட்டியல் ஒன்றைத் தயார் செய்யச் சொன்னால் அதில் ‘ப்ரண்ட்ஸ்’ படத்துக்கு இடமின்றி என்றாலும், இதன் பிறகு நான் பார்த்த ‘சுப்பிரமணியபுரம்’, ‘நாடோடிகள்’, ‘சுந்தர பாண்டியன்’ ஆகிய படங்களைப் பரிந்துரை செய்வேன். வேறொரு சந்தர்ப்பத்தில் இந்தப் படங்கள் தந்த உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version