தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்ற முதல்வர் விஜய்யின் அறிவிப்புக்கு நடிகர் அஜித் குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியவை.
குறிப்பாக, தமிழ்நாட்டில் பிரத்யேகமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
தற்போது மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஈடுபட்டு வரும் ஒருவராக, விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ்பெற்ற வார்த்தைகளை சற்றே மாற்றி இவ்வாறு கூற விரும்புகிறேன்: “தமிழ்நாடு அரசின் ஒரு சிறிய அடி, இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கு ஒரு மாபெரும் பாய்ச்சல்”
முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் அனைத்து முயற்சிகளும் பெரும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் அனைத்து விளையாட்டு முன்னெடுப்புகளும் மாபெரும் வெற்றி பெறட்டும்” இவ்வாறு அஜித் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
