சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் பெய்த மழையில், 200-க்கும்மேற்பட்ட பாம்புகள் தீயணைப்பு துறையினர் மற்றும் பாம்பு பிடிப்பவர்களால் பிடிக்கப்பட்டன.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்தால் உடனடியாக அழைக்க வேண்டிய அவசர உதவி எண்ணும் தீயணைப்பு துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் நேற்று முன்தினம் பெய்தமழையில் மாநிலம் முழுவதும் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புகட்டுப்பாட்டு அறைக்கு, பாம்புகளை பிடிக்க வேண்டும் என்றவகையில் மட்டும் 211 அழைப்புகள் பெறப்பட்டன.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பிற 2 மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு பிராந்தியத்தில் இருந்து மட்டும் 43 அழைப்புகள் பதிவாகியிருந்தன. இவ்வாறு பெறப்பட்ட அழைப்புகளின் பேரில்சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், மழைநீரில் அடித்துவரப்பட்ட 200-க்கும் மேற்பட்ட பாம்புகளை பாம்பு பிடிப்பவர்களின் உதவியுடனும் நவீன கருவிகளை பயன்படுத்தியும் பிடித்தனர்.
அதேபோல கடந்த 2 நாட்களில்பெய்த இடைவிடாத மழையில் மொத்தம் 14 மரங்கள் வேரோடுசாய்ந்தன. இவற்றை தீயணைப்புத்துறை வீரர்கள் காவல் துறையுடன் இணைந்து உடனடியாக அகற்றினர். இதுதவிர 16 தீயணைப்புக்கான அழைப்புகளும், 74 மீட்பு அழைப்புகளும் தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு வந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.