ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அமெரிக்கா – நமீபியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த அமெரிக்க அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. டி20 உலகக் கோப்பை தொடரில் அந்த அணியின் அதிகபட்ச ரன் குவிப்பாக இது அமைந்தது. இதற்கு முன்னர் அந்த அணி கடந்த 2024-ம் ஆண்டு தொடரில் கனடாவுக்கு எதிராக 197 ரன்கள் சேர்த்திருந்தது.
நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீரரும் கேப்டனுமான மோனங்க் படேல் 30 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் விளாசினார். இது அவரது 7-வது அரை சதமாக அமைந்தது. இறுதிக்கட்ட ஓவர்களில் மட்டையை சுழற்றி தனது முதல் அரை சதத்தை கடந்த சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 33 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய மிலிந்த் குமார் 20 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 28 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் குவித்தது. முன்னதாக சஹாயன் ஜகாங்கிர் 22, சாய்தேஜா முக்கமல்லா 17 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அமெரிக்க அணி முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்களையும், கடைசி 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 83 ரன்களையும் வேட்டையாடியது. இடைப்பட்ட 8 ஓவர்களில் அமெரிக்க அணி 3 விக்கெட்களை இழந்து 51 ரன்களை எடுத்திருந்தது. இந்த காலக்கட்டத்தில் அமெரிக்க அணியின் ரன்குவிப்பை சுழற்பந்து வீச்சாளர்களான வில்லெம் மைபர்க், ஜெரார்டு எராஸ்மஸ் ஆகியோர் கட்டுப்படுத்தினர். இவர்கள் இருவரும் தலா 2 விக்கெட்கைளை கைப்பற்றினர்.
200 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நமீபியா அணிக்கு லோரன் ஸ்டீன்காம்ப் அதிரடி தொடக்கம் கொடுத்தார். இதனால் அந்த அணி 10.5 ஓவர்களில் 100 ரன்கள் குவித்தது. லோரன் ஸ்டீன்காம்புக்கு உறுதுணையாக விளையாடிய ஜேன் ஃபிரைலிங்க் 19, ஜான் நிக்கோல் லோஃப்டி-ஈடன் 28 ரன்களில் வெளியேறினர். மட்டையை சுழற்றிய லோரன் ஸ்டீன்காம்ப் 30 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் விளாசிய நிலையில் ஷுபம் ரஞ்சனே பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் நமீபியா ஆட்டம் கண்டது. ஜெரார்டு எராஸ்மஸ் 6, ஜேஜே ஸ்மித் 31, ஸான் கிரீன் 18 ரன்களில் நடையை கட்டினர். 20 ஓவர்களின் முடிவில் நமீபியா அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்களே எடுத்தது. ரூபன் டிரம்பல்மேன் 3, டைலன் லெய்சர் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். அமெரிக்க அணி சார்பில் ஷாட்லி வான் ஷால்க்விக் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அமெரிக்க அணி இது 2-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 4 ஆட்டங்களில் 2 தோல்வி, 2 வெற்றியுடன் 4 புள்ளிகளுடன் லீக் சுற்றை 3-வது இடத்துடன் நிறைவு செய்துள்ளது. அமெரிக்காவின் நிகர ரன் விகிதம் 0.788 ஆக உள்ளது. தற்போதைய வெற்றியின் மூலம் அமெரிக்க அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்கிறது. ‘ஏ’ பிரிவில் மற்ற அணிகளின் முடிவுகளை பொறுத்த அமெரிக்க அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு தெரிய வரும்.













