Home விளையாட்டு செய்திகள் டெஸ்ட்டில் முகமது ஷமி: சில அரிய புள்ளிவிவரங்கள்

டெஸ்ட்டில் முகமது ஷமி: சில அரிய புள்ளிவிவரங்கள்

0

20 வயதில் ரஞ்சி கோப்பைக் கிரிக்கெட்டுக்கு அறிமுகமான முகமது ஷமி உத்திரப் பிரதேசத்தின் சஹஸ்பூர் என்ற சிறிய கிராமத்திலிருந்து கொல்கத்தாவுக்குக் குடிபெயர்ந்தார்.

டிராக்டர்களுக்கான உதிரிபாகங்களை விற்பனை செய்யும் தந்தையின் மூன்று மகன்களில் நடுப்பிள்ளையான ஷமி, கொல்கத்தாவுக்கு வந்தபோது அவருக்கென்று தங்குவதற்கு இடமில்லை; அறிமுகமானவர்கள் என்று சொல்லிக்கொள்ளவும் யாருமில்லை. டால்ஹவுசி தடகளக் கழகத்தில் கிடைத்த ஒப்பந்தம் மட்டுமே கையில் இருந்தது.

ஆனாலும் உத்திரப் பிரதேசத்தை விட சிறப்பாகவே உணர்ந்தார். காரணம் உத்திரப் பிரதேசம் விளையாட்டு வீரர்களுக்கான இடுகாடாகத்தான் இருந்தது. ஏனெனில், அங்கு கிரிக்கெட்டுக்கான முறையான கிளப் கட்டமைப்பு கிடையாது. பல நேரங்களில் ஒரு வீரரின் எதிர்காலமே, பெரிய அளவிலான தேர்வுப் போட்டிகளில் வீசும் இரண்டு அல்லது மூன்று பந்துகளைப் பொறுத்தே தீர்மானிக்கப்பட்டு வந்த கொடுமையும் நிலவியது. இந்தப் பின்னணியிலிருந்து கடின உழைப்பின் மூலம் அப்போதிருந்த ஓரளவுக்கு நல்ல அணித்தேர்வுக்குழுவினாலும் ஷமியை நாம் இன்று காண முடிந்து அவரைப் பற்றி விதந்து பேச முடிகிறது. ஒருவேளை அவர் வரும்போதே இப்போது இருக்கும் ரெஜீம் இருந்திருந்தால் அவரது எதிர்காலம் மூடுண்டு போயிருக்கலாம்.

இந்நிலையில், அவரது டெஸ்ட் பந்து வீச்சின் சில அரிய புள்ளி விவரங்களை கிரிக் இன்போ இணையதளக் கட்டுரை ஒன்று நமக்கு அள்ளித் தந்துள்ளது.

ஷமி அறிமுகமாகும் போது இந்திய அணியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே 200+ விக்கெட்டுகள் கிளப்பில் இருந்தனர்.

வந்தவுடனேயே தன் முத்திரையைப் பதித்த ஷமி 2016 முதல் 2019 வரை 35 டெஸ்ட் போட்டிகளில் 128 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் உலக அளவில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்திய வேகப்பந்து வீச்சாளராக ஷமி திகழ்ந்தார்.

இதே 2016-2019 காலக்கட்டத்தில் தான் ஷமி விளையாடிய 35 போட்டிகளில் இந்திய அணி 22-ல் வெற்றியைச் சாதித்தது. 7 போட்டிகளில்தான் தோல்வி கண்டது, அதுவும் 2018-ல்தான்.

ஷமியின் விளையாட்டு வாழ்க்கையில் மிகவும் வியக்கத்தக்க அம்சங்களில் ஒன்று என்னவென்றால், அவர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்தபோது, இந்தியாவில் நடைபெற்ற எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது இல்லை. அவர் இந்தியாவில் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்; அவற்றில் இந்தியா 17 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, நான்கு போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இதோடு ஆசியாவில் ஷமி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோற்றதில்லை; அவர் இலங்கையில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவின் வேகப்பந்து வீச்சு சாதகமற்ற ஆட்டக்களங்களில் கூட ஷமி பந்து வீசியதில் இந்தியா தோல்வியைச் சந்திக்காமல் உள்நாட்டில் வெற்றி வாகை சூடியுள்ளது. இந்தியாவில் 22.1 என்ற சராசரியில் 76 விக்கெட்டுகளை ஷமி வீழ்த்தியுள்ளார்.

ஆசியாவில் ஷமி கைப்பற்றிய 86 விக்கெட்டுகளின் சராசரி 21.59 ஆகும். இது, 75 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 59 பந்துவீச்சாளர்களில் ஐந்தாவது சிறந்த சராசரியாகும்.

தனது 229 விக்கெட்டுகளில் 66 விக்கெட்டுகளை பவுல்டு முறையில் வீழ்த்தியுள்ளார் ஷமி, இது பாகிஸ்தானிய இம்ரான் கான், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்றோருக்கு அடுத்தபடியான சிறந்த பவுலிங்கிற்கான எடுத்துக்காட்டாகும்.

66 பவுல்டுகளில் 34 பேட்டர்கள் ஒற்றை இலக்க ஸ்கோரில் ஆட்டமிழந்துள்ளனர். மேலும் 20 பேட்டர்கள் 30 ரன்களை எட்டுவதற்குள்ளாகவே பவுல்டு ஆகியுள்ளனர்.

பெரிய ஆச்சரியம் என்னவெனில் அவரது 229 டெஸ்ட் விக்கெட்டுகளில் 102 விக்கெட்டுகளில் பேட்டர்கள் சிங்கிள் டிஜிட்டில் காலியாகியுள்ளனர். அவரது விக்கெட்டுகளில் 80 சதவீத விக்கெட்டுகள், அதாவது அவுட் ஆன பேட்டர்கள் 30 ரன்களை எட்டுவதற்கு முன்னரே ஷமியிடம் காலியாகியுள்ளனர்.

டெஸ்ட் போட்டிகளின் மூன்றாவது மற்றும் நான்காவது இன்னிங்ஸ்களில் ஷமி தனது பவுலிங்கிற்காகப் பெரிதும் மதிக்கப்பட்டார். அவர் எதிரணியின் முதல் இன்னிங்ஸில் 30.6 சராசரியுடனும், 55.1 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் மொத்தம் 128 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் 101 விக்கெட்டுகள், சராசரி 24.05 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 44.1.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version