பேரிடர் மீட்பு பணிகளுக்கு மத்திய அரசு நிதி தராவிட்டாலும், மாநில அரசின் நிதியில் நவீன ஆம்பிபியன் வாகனங்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளில் ரூ.193.93 கோடி செலவில் மீட்பு படையினருக்கு வேண்டிய மீட்பு உபகரணங்கள், கனரக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. பேரவை துணைத் தலைவரின் கோரிக்கையை பரிசீலித்து, அதிகாரிகளை அங்கு அனுப்பி ஆய்வு செய்து, ஆம்பிபியன் வாகனங்கள் வாங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பேரிடருக்கென தனியாக நிதி இருக்கிறது. அந்த நிதியில் இருந்துதான் மத்திய, மாநில அரசுகள் பணிகளை செய்து கொண்டிருக்கின்றன. வேண்டிய நிதிகளை மத்திய அரசு கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் தமிழக முதல்வர் நிதி வழங்குவார். அதில் நமக்கு வேண்டிய நவீன உபகரணங்கள் வாங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.