மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள்: அனைத்து சாதி அர்ச்சகர்கள் சங்கம் திடீர் வழக்கு

0
127

முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைப்பதற்கு எதிராக, அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. மதுரை அம்மா திடலில் வரும் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, மாநாட்டு வளாகத்தில் மாதிரி அறுபடை வீடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அறுபடை வீடுகள் அமைக்க போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், அதற்கு எதிராக இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில், மாதிரி அறுபடை வீடுகள் அமைக்கலாம், ஆனால் பூஜைகள் நடத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டு, அடுத்த விசாரணை ஜூன் 13-ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அறுபடை வீடுகள் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என, அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் வா.அரங்கநாதன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

அறுபடை வீடுகளில் குறிப்பிட்ட ஆகமவிதி முறைப்படி பூஜை செய்ய வேண்டும். முருகனின் அறுபடை வீடுகளில் அறங்காவலர் குழு அனுமதி பெற்று, பாலாலயம் அமைத்து, மூலவருக்கு உரிய பூஜைகள் செய்து, உற்சவரை மட்டுமே வெளியே கொண்டுவர முடியும்.

இதனால், இந்து முன்னணி அமைக்கும் அறுபடை வீடுகளில் மூலவர் சிலை அமைக்கவே முடியாது. உற்சவர் சிலையும் ஆகமவிதிப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்திய பிறகே பூஜை செய்ய முடியும். மாதிரி அறுபடை வீடுகளில் இரு வேளை பூஜை என்பது ஆகமத்துக்கு முரணானது.

மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அறநிலையத் துறையிடம் ஒப்புதல் பெறவில்லை. மதுரை மாநகராட்சி, தீயணைப்புத் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமும் அனுமதி பெறவில்லை. மாதிரி அறுபடை வீடுகள் அமைத்து பூஜை செய்ய அனுமதிப்பது கோடிக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கையை அவமதிப்பதாகும். ஆன்மிகத்தை அரசியலுக்குப் பயன்படுத்தக் கூடாது. கடவுளை கட்சிக்குப் பயன்படுத்தக் கூடாது.

எனவே, முருக பக்தர்கள் மாநாட்டில் மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க தடை விதித்து, இந்து முன்னணியின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here