மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி, கடந்த 2006-ல் சமயநல்லூர் தொகுதியில் (தனி) வென்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்தவர். தொகுதி மறுசீரமைப்பில் சமயநல்லூர் தொகுதி மறைந்ததால், கடந்த 2011-ல் மானாமதுரை தொகுதியில் (தனி) போட்டியிட்டு தோற்றார். அப்போதே மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பனும், அவரது ஆதரவாளர்களும் ஒத்துழைக்காததே தமிழரசி தோல்விக்கு காரணம் என்று பரவலாக பேசப்பட்டது.
2016-ல் அவருக்கு சீட் மறுக்கப்பட்டது. கடந்த 2019 இடைத்தேர்தலிலும் சீட் தரவில்லை. ஆனாலும் அவர் விடாப்பிடியாக, கட்சி தலைமையிடம் போராடி, கனிமொழி ஆதரவோடு கடந்த 2021-ல் சீட் வாங்கி, மானாமதுரையில் வெற்றி பெற்றார்.
தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த அவருக்கு, அந்த வாய்ப்பு இல்லாமல் போனது. மாவட்டம் முழுவதுமே கே.ஆர்.பெரியகருப்பன் ஆதரவாளர்களே இருந்ததால், அவர் எதிர்பார்த்தபடி செயல்பட முடியவில்லை. இதனால் சில ஆண்டுகள் வரை அவருக்கும், அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனுக்கும் இடையே பனிப்போர் இருந்தது.
அந்த சமயத்தில் கே.ஆர்.பெரியகருப்பனின் ஆதரவாளராக இருந்த முன்னாள் எம்எல்ஏ மதியரசன், தமிழரசிக்கு ஆதரவாக மாறினார். இந்நிலையில், தனக்கு ஆதரவாக செயல்பட, அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாரியப்பன் கென்னடியை திமுகவுக்கு கொண்டு வந்து, உடனே மானாமதுரை நகராட்சித் தலைவராக ஆக்கினார் கே.ஆர்.பெரியகருப்பன். கடந்த 2016-ல் மானாமதுரை அதிமுக எம்எல்ஏவாக இருந்த மாரியப்பன் கென்னடி, டிடிவி.தினகரன் ஆதரவாளராக மாறியதால் எம்எல்ஏ பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கு எதிராக காய் நகர்த்தப்படுவதை அறிந்த தமிழரசி, எதிர்த்து நிற்பது வேலைக்கு ஆகாது என நினைத்து கே.ஆர்.பெரியகருப்பனுடன் இணக்கமானார். தொடர்ந்து தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் குறியாகஇருந்து பெரும்பாலானவற்றை நிறைவேற்றினார்.
இதனிடையே தமிழரசிக்கு ஆதரவாக இருந்த மாவட்ட துணைச் செயலாளரும், திருப்புவனம் பேரூராட்சித் தலைவருமான சேங்கைமாறனும், தற்போது அவருக்கு எதிரான மனநிலையில் உள்ளார். மாரியப்பன் கென்னடிக்கு முழு ஆதரவாக உள்ளார்.
மானாமதுரையில் அமைக்கப்பட்ட மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிரான போராட்டத்தை தடுப்பதற்கான சமரச பேச்சுவார்த்தை சமீபத்தில் நடந்தது. கே.ஆர்.பெரியகருப்பன், தமிழரசி பங்கேற்ற இந்த கூட்டத்தில் அங்கிருந்த ஒருவர் ஆலைக்கு ஆதரவாக தமிழரசி செயல்படுகிறார் என கொளுத்திப் போட்டார்.
இதனால் அதிருப்தியடைந்த தமிழரசி, ஏற்கெனவே நீங்கள் பங்கேற்ற அரசு விழாவிலேயே ஆலை வரக் கூடாது என மக்கள் நினைக்கின்றனர் என்று பேசினேன் என அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார். இது போன்று தமிழரசிக்கு எதிரான விஷயங்களை சிலர் கிளப்பி விடுகின்றனர்.
தமிழரசி இந்த முறை மதியரசன் ஆதரவோடு, கனிமொழி, உதயநிதி ஆசியோடு மீண்டும் சீட் பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் உள்ளார். ஆனால் மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன், சேங்கை மாறன் ஆசி இருப்பதால், தமிழரசியுடன் சீட்டுக்காக மாரியப்பன் கென்னடி மல்லுக்கட்டி வருகிறார்.














