வணிகவரித் துறையில் ரூ.2.02 கோடி செலவில் 23 புதிய வாகனங்களை அலுவலர்களின் பயன்பாட்டுக்காக அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி (ம) பதிவுத்துறை வளாக கூட்டரங்கில், அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், ஏப்ரல் மாதத்துக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, வணிகவரித் துறையில் ரூ.2.02 கோடி செலவில் புதிதாக வாங்கப்பட்ட 23 வாகனங்களை அலுவலர்களின் பயன்பாட்டுக்காக அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசும்போது, ‘‘கடந்த நிதி ஆண்டில் வரி வருவாய் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து சிறப்பாக செயல்பட்ட ஆணையர் மற்றும் அனைத்து உயர் அலுவலர்களுக்கும் பாராட்டுகள்.
நடப்பு நிதி ஆண்டிலும் அதே முனைப்புடன் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு அரசு நிர்ணயித்துள்ள வருவாய் இலக்கை அடைவதற்கு அனைத்து இணை ஆணையர்களும் சிறந்த முறையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் வணிகவரி ஆணையர் டி.ஜகந்நாதன், இணை ஆணையர் மொ.நா.பூங்கொடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.