காஸ் தட்டுப்பாடு வரும்பட்சத்தில் அரசு மருத்துவமனைகளில் மின்சார ஸ்டவ், விறகு அடுப்புகளை தயார் நிலையில் வைக்குமாறு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
சைதாப்பேட்டை எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதி ரூ.1.15 கோடியில், சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள காத்திருப்புக் கூடத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.
முதல்வர் மருத்துவக் காப்பீட்டு திட்ட நிதியின் மூலம் இயன்முறை பயிற்றுநர் நியமிக்கப்பட்டு, ரூ.1.50 லட்சத்தில் புதிய இயன்முறை கருவிகளின் பயன்பாடு, யோகா – இயற்கை மருத்துவப் பிரிவுக்கு ஒரு மருத்துவர் மற்றும் ஒரு மருத்துவ உதவியாளருடன் கூடிய சேவையை தொடங்கி வைத்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காஸ் தட்டுப்பாடு தொடர்பாக துறைச் செயலர், அனைத்து மருத்துவக் கல்லூரி டீன்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த வாரத்துக்கு காஸ் தட்டுப்பாடு பிரச்சினை இல்லை. கடுமையான தட்டுப்பாடு வரும்பட்சத்தில், இதற்கு மாற்று ஏற்பாடாக எலெக்ட்ரிக் ஸ்டவ், விறகு அடுப்புகள் போன்றவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.














