சக்திவாய்ந்த ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கர் நேற்று பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிப்பது மற்றும் சர்வதேச வர்த்தகத்துக்கான கடல்சார் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை எவ்விதத் தடையுமின்றி இயக்குவது குறித்து இந்த மாநாட்டில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்த சக்தி வாய்ந்த ஜி7 கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக இல்லாதபோதிலும், தற்போதைய தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் பிரான்ஸ் நாட்டின் அழைப்பின் பேரில் ‘கூட்டணி நாடு’ என்ற அந்தஸ்தில் இந்தியா அதில் பங்கேற்கிறது. அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
பிரான்ஸின் அபே டெஸ்-வாக்ஸ்-டி-செர்னே பகுதியில் மாா்ச் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர் ஜெய்சங்கர், இதர நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் சேர்த்து சவூதி அரேபியா, தென் கொரியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்கும் பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலைத் தணிப்பதற்கான பேச்சுவார்த்தை வழிகளை ஆராய்வதும், கடல்சார் வணிகப் பாதைகளை மீண்டும் திறப்பதுமே இந்த மாநாட்டின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என பிரான்ஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளார். மேலும், ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களைக் கட்டுப்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தின்போது வெளியுறவு அமைச்சர்கள் விவாதிக்க உள்ளனர். ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் நீடித்தால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.














