மணிப்பூரில் பெண்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு: ஒரு உயிரிழப்பு

0
107

மணிப்பூரில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.

மணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூர் மாவட்டம் சைடோன் கிராமத்தில் உள்ள வயலில் சுமார் 20 பெண்கள் நேற்று முன்தினம் நெல் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அந்த பெண்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதில் சபம் சோபியா (27) என்ற பெண் உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்த பெண்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் அந்த கிராமத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் உயிரிழந்த அந்தப் பெண்ணின் உடலை மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸாரும் மத்திய பாதுகாப்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “சம்பவம் நடந்த இடம் வனப்பகுதிக்கு மிக அருகில் உள்ளது. இதனால், துப்பாக்கியால் சுட்டவர் வனப்பகுதிக்குள் ஓடி ஒளிந்து கொண்டுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரவாதிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார்.

முன்னதாக, ஜிரிபம் மாவட்டத்தில் கடந்த 7-ம் தேதி இரவு 31 வயது பெண்ணை ஆயுதம் ஏந்திய கும்பல் தாக்கியதுடன் அவரை தீயிட்டு கொளுத்திவிட்டு தப்பி ஓடியது. அந்தப் பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here