மேட்டூர் அணை நிரம்பி வழியும் போதெல்லாம் ஏராளமான டிஎம்சி நீர் வலுக்கட்டாயமாக கடலுக்கு அனுப்பப்படும். அப்போதெல்லாம், சேலம் மாவட்ட மக்கள் மத்தியில் கோபம் கொப்பளித்து அடங்கும். இந்த நிலையில், சேலம் மாவட்டத்துக்காரரான பழனிசாமி தமிழக முதல்வரானதும் மேட்டூர் உபரிநீரை தனது எடப்பாடி தொகுதி உட்பட 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பயன் தரும் விதமாக 100 ஏரி திட்டத்தை அறிவித்தார்.
இதற்காக ரூ.565 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு மளமளவென பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த அதிமுக ஆட்சி முடிவடையும் முன்பாகவே நீரேற்று நிலையம் அமைத்து, முதல்கட்டமாக 6 ஏரிகளுக்கு மேட்டூர் உபரி நீரும் சென்று சேர்ந்தது. இதனால் ஜெயலலிதா இல்லாதபோதும் கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு சேலம் மாவட்ட மக்கள் அமோக வெற்றியைக் கொடுத்தனர்.
இப்போது, அந்த 100 ஏரி திட்டத்தை வைத்து, அதிமுகவும், வசிஷ்ட நதி வரை மேட்டூர் அணையின் உபரி நீரை கொண்டு சென்று, சேலம் மாவட்டம் முழுமைக்கும் பாசனம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று பாமகவும் அரசியல் செய்ய ஆரம்பித்திருப்பது ஆளுங்கட்சிக்கு இக்கட்டை உருவாக்கி வருகிறது.
கடந்த வாரம் எடப்பாடிக்கு வந்திருந்த பழனிசாமி, 100 ஏரி திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், “அதிமுக ஆட்சியிலேயே 6 ஏரிகளுக்கு மேட்டூர் உபரி நீரை கொடுத்துவிட்டோம். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டு நிறைவடையப் போகும் நிலையில், இதுவரை 59 ஏரிகளுக்கு மட்டுமே மேட்டூர் உபரிநீர் வந்துள்ளது.
அதிமுகவுக்கு நற்பெயர் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக இத்திட்டத்தை திமுக அரசு முடக்கிவிட்டது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இத்திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவோம்” என்று சூளுரைத்தார். அதேபோல் சேலம் மாவட்டத்தில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி, “மேட்டூர் உபரிநீர் திட்டத்தில் சரபங்கா, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதி ஆகியவற்றையும் இணைத்து, மாவட்டம் முழுமைக்குமான பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
வசிஷ்ட நதிக்கு காவிரி உபரிநீரை கொண்டு வந்தால், அதன்மூலம் கடலூர் மாவட்டமும் பயனடையும்” என்றார். இப்படியாக, மேட்டூர் தண்ணீரை வைத்து சேலம் மாவட்டத்தின் 11 தொகுதிகளின் தேர்தல் களத்தை இயக்க ஆரம்பித்திருக்கின்றன எதிர்க்கட்சிகள்.
இதுகுறித்து பொதுப்படையாக பேசிய சேலம் மாவட்ட விவசாயிகள் சிலர், “மேட்டூர் அணையை ஒட்டியிருந்தும் காவிரி நீர் கிடைக்காத கொளத்தூர் வட்டார மக்கள், தோனிமடுவு திட்டத்தை செயல்படுத்த தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேட்டூர் உபரிநீரை ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர் வட்டங்களுக்கும், கொளத்தூர் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல ஈரோடு மாவட்ட திமுகவினர் ஆர்வமாக இருக்கின்றனர்.
மேட்டூர் உபரிநீர் திட்டத்தால், சேலம் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் உள்ள அனைத்து கட்சியினரும் பயனடைந்துள்ளனர். மாவட்டத்தின் எஞ்சிய தொகுதிகளுக்கும் மேட்டூர் உபரி நீர் கிடைக்க வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு. எனவே இம்முறையும் சேலம் மாவட்ட தேர்தல் முடிவுகளில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தின் பங்கு பிரதானமாக இருக்கும்” என்றனர்.














