பியூனஸ் அயர்ஸ்: 2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று போட்டியில் பொலிவியா அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோல் பதிவு செய்து மெஸ்ஸி அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் அர்ஜெண்டினா அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான தகுதி சுற்று போட்டிக்கான இந்த ஆட்டம் அர்ஜெண்டினாவில் நடைபெற்றது. கணுக்கால் காயம் காரணமாக சமீபகால போட்டிகளில் பங்கேற்காத 37 வயதான நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி, அண்மையில் அணிக்கு திரும்பினார்.
இதில் 19, 84, 86 ஆகிய நிமிடங்களில் மெஸ்ஸி கோல் பதிவு செய்தார். சக அணி வீரர்கள் 2 கோல்கள் பதிவு செய்ய அசிஸ்ட் செய்து அவர் உதவினார். அதன் மூலம் தனது அபார ஆட்டத்திறனை அவர் வெளிப்படுத்தி இருந்தார். இதில் மெஸ்ஸி பதிவு செய்த இரண்டாவது கோல் கிளாசிக் ரகம். பந்தை டிரிபிள் செய்து இடது காலில் இருந்து வலது காலுக்கு மாற்றி அதனை கோல் கம்பத்தின் வலது பக்கமாக (கீழ்புறம்) தள்ளி கோல் பதிவு செய்தார். அடுத்த இரண்டு நிமிடங்களில் மூன்றாவது கோலை அவர் பதிவு செய்தார்.
அர்ஜெண்டினாவின் மார்டினஸ், அல்வரஸ் மற்றும் தியாகோ ஆகியோரும் 45, 45(+3), 69-வது நிமிடங்களில் கோல் பதிவு செய்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 10 அணிகள் அடங்கிய தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் 10 போட்டிகளில் விளையாடி 22 புள்ளிகளை அர்ஜெண்டினா பெற்றுள்ளது. இதன் மூலம் பட்டியலில் அந்த அணி முதலிடத்தில் உள்ளது.
அர்ஜெண்டினா நடப்பு உலக சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. 2026 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.














