கிஷோர் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மெல்லிசை’. தனன்யா, சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப் படத்தை ‘வெப்பம் குளிர் மழை’யைத் தயாரித்த ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ளது. அப்பா- மகள் இடையேயான உறவைப் பிரதிபலிக்கும் கதை கொண்டது இந்தப் படம்.
படம் பற்றி நடிகர் கிஷோர் கூறும் போது, “நிறைவேறாத கனவுகள், பொறுப்புகள் மற்றும் நம்பிக்கையுடன் கூடிய சாதாரண வாழ்க்கையைப் பற்றியதாக இப்படத்தின் கதையை என்னிடம் சொன்னார்கள். எந்தவிதமான சமரசங்களும் இல்லாமல் கதை நேர்மையாக இருந்தது.
வாழ்க்கையுடன் நெருக்கமாக இருக்கும் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது, நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை எனக்கு நினைவூட்டியது. இயக்குநர் திரவ், தயாரிப்பாளர்கள், என் சக நடிகர்கள் மற்றும் இந்தப் பயணத்தை உண்மையாகக் கொடுத்த ஒவ்வொரு தொழில்நுட்ப வல்லுநருக்கும் என் நன்றி. இந்தப் படத்தில் அனைவருமே மனப்பூர்வமாக வேலை பார்த்திருக்கிறோம் என்பதே இப்படத்தை இன்னும் ஸ்பெஷலாக்கியது” என்றார்.







