தமிழ் சினிமா பேசத் தொடங்கிய காலகட்டத்திலேயே சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவான கருத்துகள் படங்களில் இடம்பெறத் தொடங்கிவிட்டன.
சென்னை ராஜதானியில், 1937-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்ததும் திரைப்படத் தணிக்கை முறையில் தளர்வு செய்யப்பட்டது. இதையடுத்து நாட்டுப்பற்றைப் போற்றும் திரைப்படங்கள் வெளிவந்தன. அதில் ஒன்று ‘மாத்ருபூமி’. சுதந்திர உணர்வைக் கொஞ்சம் ஆக்ரோஷமாகவே பேசிய படம் இது.
‘சந்திரகுப்தா’ என்ற வங்க மொழி நாடகத்தைத் தழுவி உருவான படம். அந்த காலத்திலேயே 2 லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்துக்கான போர்க்காட்சிகள், செஞ்சிக் கோட்டை மற்றும் கிருஷ்ணகிரியில் படமாக்கப்பட்டன. தினமும் ஐந்து அணா சம்பளத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் இதில் நடித்தனர். வரலாற்றுப் புனைவுத் திரைப்படமான இதில் டி.எஸ்.சந்தானம், டி.ஆர்.பி. ராவ், சி.எஸ்.டி.சிங், பி.யு.சின்னப்பா, கே.கே.பெருமாள், காளி என். ரத்தினம், டி.வி. குமுதினி, பி.சாரதாம்பாள், ஏ.கே. ராஜலக்ஷ்மி என பலர் நடித்தனர்.
டி.எஸ்.சந்தானம் உக்கிர சேனனாகவும், ஜெயபாலனாகவும் இரண்டு வேடங்களில் நடித்தார். கிரேக்கத் தளபதி மினாந்தராக சி.எஸ்.டி. சிங்கும், ஹெலனாக ஏ.கே. ராஜலக்ஷ்மியும் நடித்தனர். அப்போது அதிகம் பிரபலமடையாத பி.யு.சின்னப்பா, சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்தை ஹெச்.எம். ரெட்டி என்று அழைக்கப்பட்ட முனியப்பா ரெட்டி இயக்கினார். தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸை (1931) இயக்கியவர் இவர். பாடல்களை எழுதி இசை அமைத்தார் பாபநாசம் சிவன்.
இதில் நாயகியாக அறிமுகமானார், பிரபல பாடகியான டி.வி.குமுதினி. புதுமுகங்களை அறிமுகப்படுத்த நினைத்த இயக்குநர் ரெட்டி, மதுரைக்குச் சென்று அங்கு குமுதினி கேரக்டருக்கு கல்யாணி காந்திமதி என்பவரைத் தேர்வு செய்தார். இந்தப் படத்தில் குமுதினி பாத்திரத்தில் நடித்ததால், பின்னர் குமுதினி என்றே அழைக்கப்பட்டார், அவர்.
படத்தில் வீரமான பெண்ணாக நடித்திருப்பார் குமுதினி. நாட்டுப் பற்று கொண்ட அவர், தனது கணவன் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் தேசத் துரோகி என்பதை அறிந்ததும் தாலியை கழற்றி அவர் முகத்தில் வீசி விட்டுச் செல்வது போன்ற காட்சி வைக்கப் பட்டிருந்தது. இது, அந்த காலகட்டத்தில் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. அதோடு தேசப்பற்றையும் பேசியதால் மக்கள் மத்தியில் அந்தக் காட்சி ஆழமாகப் பதிந்தது.
குமுதினி, சுதந்திர இயக்கத்தை முன்னிலைப்படுத்தும் பாடல் களையும் இதில் பாடியிருந்தார். ‘நமது ஜென்ம பூமி… நமது ஜென்ம பூமி…’, ‘அன்னையின் காலில் விலங்குகளோ..?’ உள்ளிட்ட சில பாடல்கள் அப்போது வரவேற்பைப் பெற்றன. ‘நமது ஜென்ம பூமி’ பாடலுக்காக ஒரு லட்சம் இசைத்தட்டுகள் விற்றுத் தீர்ந்ததாகச் சொல்கிறார்கள். தேசப்பக்தியை பேசும்படம் என்பதால் தடை செய்யப்படலாம் என்றும் கூறப்பட்டது. அதையும் மீறி 1939-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.