ரவி தேஜா நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாஸ் ஜாத்ரா’ படக்குழுவினர் இணையத்தில் கடும் கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
பானு போகவரப்பு இயக்கத்தில் ரவி தேஜா, ஸ்ரீலீலா, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ் ஜாத்ரா’. இப்படத்துக்கு ஆரம்பத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. நீண்ட நாட்கள் கழித்து ரவி தேஜா நடிப்பில் வெளியாகும் முழுநீள கமர்ஷியல் படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இப்படத்தினை தயாரித்து வெளியிட்டார் நாக வம்சி.
எப்போதுமே பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படையாக பேசி சிக்கிக் கொள்பவர் நாக வம்சி. ‘மாஸ் ஜாத்ரா’ படத்தின் வசூல் எதிர்பாராத அளவுக்கு குறைந்த அளவிலேயே செய்திருக்கிறது. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். மேலும் தொடர்ந்து தயாரிப்பு மற்றும் விநியோகம் இரண்டிலுமே தோல்விப் படங்களையே கொடுத்துள்ளார் நாக வம்சி.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், “இப்படம் பார்த்து நீங்கள் அதிர்ச்சியடையவில்லை என்றால், நான் திரையுலகை விட்டே போய்விடுகிறேன்” என்று பேசினார் மூத்த நடிகர் ராஜேந்திர பிரசாத். அவருடைய பேச்சை வைத்து ‘மாஸ் ஜாத்ரா’ படத்தினை கிண்டல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள். மேலும், ராஜேந்திர பிரசாத்தின் காட்சிகள் தான் படத்தின் பெரிய மைனஸ் எனவும் பலரும் குறிப்பிட்டு கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
            













