சந்தை போட்டியை சமாளிக்க முடியாமல் நெருக்கடியை சந்திக்கும் டிஎன்பிஎல் நிறுவனத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்த அறிக்கை: உலகெங்கிலும் உள்ள கரும்புச் சக்கை அடிப்படையிலான காகித ஆலை உற்பத்தி நிறுவனங்களில் கரூர் மாவட்டம், புகளூரில் உள்ள தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (டிஎன்பிஎல்) நிறுவனம் முன்னணி இடத்தை வகித்து வருகிறது.
இந்நிறுவனத்தின் உதவியுடன் காகித அட்டை ஆலை, காற்றாலை, சிமெண்ட் ஆலை போன்றவை உருவாக்கப்பட்டு, கிடைக்கும் வருவாயில் கல்வி, மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட பல வகைகளில் மக்களுக்கு உதவிகளையும், சேவைகளையும் புரிந்து வருகிறது. இதன் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பலனடைந்து வருகின்றன.
இந்நிலையில், ஒரு டன் சுமார் ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஆலையின் காகிதம் தற்போது சந்தைப் போட்டியை சமாளிக்க முடியாமல் ரூ.64 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் உற்பத்தி செலவைக் கூட ஈடு செய்ய முடியாமல் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. இதே நிலை நீடித்தால், நிறுவனத்தை நம்பி வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட வாய்ப்புண்டு.
எனவே, காகித உற்பத்திக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்கும், தெற்காசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காகிதங்களை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு முன்வர வேண்டும்.
மேலும், டிஎன்பிஎல் நிறுவனத்தை மேம்படுத்தவும், நவீன கட்டமைப்புகளை பலப்படுத்துவதற்கும் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி நிறுவனத்தையும் தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.