மர்மயோகி: தமிழ் சினிமாவின் முதல் ‘ஏ’ சான்றிதழ் படம்!

0
267

எம்.ஜி.ஆர் கதாநாயகனாக அறிமுகமான ‘ராஜகுமாரி’யை இயக்கியவர் ஏ.எஸ்.ஏ.சாமி. 1947-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெற்றி பெற்றது என்றாலும் அந்த வெற்றிக்கு, தான் காரணமல்ல என்பதை உணர்ந்தார் எம்.ஜி.ஆர். இதனால் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தும் விதமாக, தன்னை முன்னிலைப் படுத்தும் ஒரு கதையை எழுத ஏ.எஸ்.ஏ.சாமியிடம் கேட்டுக்கொண்டார் எம்.ஜி.ஆர். அப்படி அவர் உருவாக்கிய ஸ்கிரிப்ட் தான் ‘மர்மயோகி’!

அந்த காலத்து ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோக்களான டக்ளஸ் ஃபேர்பேங்க்ஸ் (Douglas Fairbanks) எர்ரோல் பிளைன் (Errol Flynn) ஆகியோரின் தீவிர ரசிகராக எம்.ஜி.ஆர் இருந்ததால், அவர்களின் படங்களைப் போன்ற ஆக்‌ஷன் கதையை விரும்பினார். ஆங்கில எழுத்தாளர் மேரி கோரெல்லி எழுதிய ‘வெஞ்சன்ஸ்’ என்ற நாவல், ஆர்சன் வெல்ஸ் இயக்கத்தில் 1948-ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ஷேக்ஸ்பியரின் ‘மேக்பத் மற்றும் ராபின் ஹுட்’ படங்களின் தாக்கத்தில் இந்தக் கதையை உருவாக்கினார் ஏ.எஸ்.ஏ.சாமி.

ஒரு நடனப் பெண்ணின் கலையில் மயங்கி அவரை மனைவியாக்கிக் கொள்கிறார், மன்னர். ஒரு கட்டத்தில் பரிசலில் செல்லும்போது மன்னரை கொல்லும் அவர், மன்னரின் வாரிசுகள் இருக்கும் மாளிகையைத் தீவைத்து எரித்துவிடுகிறார். பிறகு தானே ராணியாகிறார். இதற்கிடையே அங்கு கரிகாலன் என்பவர் மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார். இதை அறியும் ராணியின் தளபதி வீராங்கன், கரிகாலனை மயக்க ஒரு பெண்ணை அனுப்புகிறார். அவர் வந்த வேலையை விட்டுவிட்டு கரிகாலனைக் காதலிக்கத் தொடங்குகிறார். இந்நிலையில், ஆவி ஒன்று, ராணியை அடிக்கடி மிரட்டிவிட்டுப் போகிறது. இறுதியில் கரிகாலன் யார்? அந்த ஆவி யார்? என்பது தெரியவர என்ன நடக்கிறது என்பது படம்.

கே.ராம்நாத் இயக்கிய இந்தப் படத்தில் அஞ்சலி தேவி நாயகியாக நடித்தார். முதலில் அஞ்சலி தேவி கதாபாத்திரத்துக்கு பானுமதியை தான் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். பின்னர் அவர் மாற்றப்பட்டார். சகஸ்ரநாமம், மாதுரி தேவி, செருகளத்தூர் சாமா, ஜாவர் சீதாராமன், எஸ்.ஏ.நடராஜன், எம்.என்.நம்பியார், எம்.பண்டரிபாய் என பலர் நடித்தனர். இதில் நம்பியாருக்கு பாசிட்டிவ் கேரக்டர். ஜாவர் சீதாராமன் எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் இதுதான்.

எஸ்.எம்.சுப்பையா நாயுடு, சி.ஆர்.சுப்பாராமன் இசை அமைத்த இந்தப் படத்தை ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்தது. எம்.ஜி.ஆர். நடிப்பில், தாய்க்குப் பின் தாரம், தாய் சொல்லை தட்டாதே, வேட்டைக்காரன் உட்பட பல படங்களை இயக்கிய எம்.ஏ.திருமுகம், இயக்குநராகும் முன் இந்தப் படத்துக்கு எடிட்டராக பணியாற்றினார்.

இதுபோன்ற கதைகளைக் கொண்ட படங்களில், கதாநாயகர்களின் பெயர்கள் பெரும்பாலும் வீரசிம்மன், பிரதாபன் என்பது போலதான் வைத்திருப்பார்கள். ஆனால் சாமி, தமிழ் அரசனான கரிகாலனின் பெயரை நாயகனுக்குச் சூட்டினார். முதலில் இந்தப் படத்துக்கு ‘கரிகாலன்’ என்றே டைட்டிலும் வைத்திருந்தனர். இதை வரலாற்றுப் படம் என்று நினைத்துவிடக் கூடாது என்பதால் ‘மர்மயோகி’ என்று பின்னர் தலைப்பு மாற்றப்பட்டது.

இந்தப் படத்தில் ஒவ்வொரு வசனமும் எம்.ஜி.ஆருக்காவே எழுதப்பட்டது. ‘நான் குறி வைத்தால் தவறு செய்யமாட்டேன். தவறுமேயானால் குறி வைக்கமாட்டேன்’ என்பது உட்பட பல வசனங்கள் ரசிகர்களைக் கவர்ந்தன. இதன் இன்னொரு வெர்சன்தான் ‘வேட்டையன்’ படத்தின் ‘குறி வச்சா இரை விழணும்’ என்பது என்று கொள்ளலாம்.

இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கும் சகஸ்கரநாமத்துக்குமான வாள் சண்டை அப்போது பேசப்பட்டது. டூப் போட மறுத்து இந்த ஆக்‌ஷன் காட்சியில் அதிரடியாகப் பங்கேற்றார் எம்.ஜி.ஆர். மொத்த படத்தின் ஷூட்டிங்கும் முடிந்து போட்டுப் பார்த்த இயக்குநர் ராம்நாத்துக்கு கிளைமாக்ஸ் பிடிக்கவில்லை. பின்னர் அதை வேறு மாதிரி மாற்றி எடுத்தார்கள். ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு படத்தை சூப்பர் ஹிட்டாக் கினர்.

‘மர்மயோகி’க்கு அப்போதைய தணிக்கை அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் முதல் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற படம் இதுதான். படத்தில் ஆவி தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இந்தச் சான்றிதழாம்!

1951-ம் ஆண்டு பிப்.2-ம் தேதி வெளியானது இந்தப் படம். இப்போது பார்த்தாலும் அதே விறுவிறுப்போடு இருப்பதுதான் ‘மர்மயோகி’யின் ஆகப் பெரும் சிறப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here