ஓசூர் பகுதியில் சாமந்திப்பூ அறுவடை தீவிரம்: பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

0
231

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக மலர் சாகுபடிஅதிக அளவில் நடைபெறுகிறது. குறிப்பாக, சாமந்திப் பூ, செண்டுமல்லி, பட்டன் ரோஜா உள்ளிட்டவை அதிகம் சாகுபடியாகின்றன.

இங்கு அறுவடை செய்யப்படும் மலர்கள் ஓசூர் மலர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் பெங்களூருவுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படும். நடப்புஆண்டு பருவ மழை கைகொடுத்ததால் சாமந்திப்பூக்கள் அதிக அளவில் விளைந்தன. இதனால், விநாயகர் சதுர்த்தியின்போது உரிய விலை கிடைக்கவில்லை.

இதனிடையே, நாளை (அக். 11)ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் நாளை மறுநாள் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், பூக்கள் தேவை அதிகரித்து, விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து, ஓசூர் பகுதியில் சாமந்திப்பூ அறுவடைப் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஓசூர் மலர் சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு கிலோ ரூ.80 வரை விற்பனையான சாமந்திப்பூ நேற்று முதல் தரம் ரூ.280-க்கும், 2-ம் தரம் ரூ.200-க்கும், 3-தரம் ரூ.160-க்கும் விற்பனையானது. கடந்த ஆண்டு ஆயுதபூஜையைவிட தற்போது சாமந்திவிலை பல மடங்கு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் கூறும்போது, “ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு, சந்தையில் பூக்களுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இதனால் முன்கூட்டியே சாமந்திப்பூ அறுவடைப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளோம். மேலும், வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களுக்கு வந்துபூக்களைக் கொள்முதல் செய்வதால், போக்குவரத்து செலவு குறைந்துள்ளது” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here