மாவோயிஸ்ட்களை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தேடுல் வேட்டைகள் நடத்தப்படும் அதே நேரத்தில், சரணடையும் மாவோயிஸ்ட்களுக்கு மறுவாழ்வுக்கு தேவையான உதவிகளும் அளிக்கப்படுகின்றன. இதனால் சரணடையும் மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் லதேகர் மாவட்டத்தில் போலீஸார் முன்னிலையில், 2 மாவோயிஸ்ட்கள் சரணடைந்தனர். அவர்களில் ஒருவர் கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த ராகேஷ் ஜி என்ற பிரஜேஷ் யாதவ். இவர் மாவோயிஸ்ட் அமைப்பில் துணை மண்டல கமாண்டராக இருந்தார். இவரை பற்றி தகவல் தெரிவிப்போருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவருடன் சேர்ந்து லதேகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவோயிஸ்ட் கமாண்டர் அவதேஷ் லோரா என்ற ரோகித் லோராவும் சரணடைந்தார். இவர்கள் மீது 10 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, லதேகர் மாவட்ட எஸ்.பி. தெரிவித்தார். போலீஸார் மற்றும் பொது மக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் இரண்டு மாவோயிஸ்ட்கள் சரணடைந்துள்ளனர். அவர்களுக்கு அரசு உதவிகள் அனைத்தும் வழங்கப்படும் என காவல்துறை ஐ.ஜி. சைலேந்திர குமார் சின்ஹா தெரிவித்தார்.














