எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் மணிப்பூர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் பிராந்திய சுயாட்சிக்கு ஆதரவான கருத்தை கூறியிருந்தார். பிறகு அப்பதிவை நீக்கிவிட்டார்.
இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மணிப்பூர் காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய கடிதத்தில், “மணிப்பூர் விவகாரம் தொடர்பான ப.சிதம்பரம் பதிவின் உள்ளடக்கத்தை நாங்கள் ஒருமனதாக கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளனர். மேலும் மாநிலத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான தங்கள் கட்சியின் உறுதிப்பாட்டை காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.














