இந்தியாவின் மாம்பழ பாரம்பரியத்தைக் கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் நாட்டின் பல்வேறு மாநில தோட்டங்களிலிருந்த பறிக்கப்பட்ட சுவை மிகுந்த மாம்பழங்களை சென்னை மக்களுக்கு நேரடியாக வழங்கும் விதமாக, நபார்டு வங்கி மற்றும் அதன் துணை நிறுவனமான நப்கிசான் ஃபைனான்ஸ் சார்பில் ‘மாம்பழ திருவிழா – 2026’ சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நேற்று தொடங்கியது.
இதில் தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் பிரசித்தி பெற்ற அல்போன்சா, மல்கோவா, இமாம்பசந்த், பங்கனபள்ளி, செந்தூரா, ருமானி, மல்லிகா, நீலம், ரஸ்வாலி, பெங்களூரா உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் 16 அரங்குகளில் குவிக்கப்பட்டுள்ளன. ஜூன் 14 வரை 3 நாட்களுக்கு காலை 10 மணிமுதல் இரவு 11 மணிவரை கண்காட்சி நடைபெறுகிறது.
மாம்பழ திருவிழாவைத் தொடங்கி வைத்து பார்வையிட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர்.வினோத், நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 8 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.2.25 கோடிக்கான கடனுதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: தமிழகத்தில் 1.45 லட்சம் ஹெக்டேர் பரப்பில் மாம்பழம் சாகுபடி செய்யப்பட்டு, 9.49 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதையொட்டி தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் புதிதாக ‘மா’ நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வரையும், குறைந்த இடைவெளியில் அதிக மாங்கன்றுகளை நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.48 ஆயிரம் வரையும், பழைய மாந்தோட்டத்தை புதுப்பிக்க ஒரு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வரையும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து ‘மா’ ஏற்றுமதிக்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு துறைகளுடன் இணைந்து கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல், தேனி, வேலூர், திருவள்ளூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ‘மா’ சிறப்புக் குழுக்கள் அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தற்போது 162 டன்னாக உள்ள மாம்பழ ஏற்றுமதியை அடுத்த 5 ஆண்டுகளில் 1000 டன்னாகவும், பதப்படுத்தப்பட்ட ‘மா’ பொருட்களின் ஏற்றுமதியை 75 ஆயிரம் டன்னில் இருந்து 1.46 லட்சம் டன்னாகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்று அவர் பேசினார்.
இந்நிகழ்வில் தோட்டக்கலைத் துறை இயக்குநர் ஜெ.விஜயா ராணி, நபார்டு வங்கியின் பொது மேலாளர் எஸ்.எஸ்.வசீகரன், தலைமைப் பொது மேலாளர் ஹெச்.மனோஜ், இந்திய ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் சுப்பிரமணியன், நப்கிசான் மூத்த துணைத் தலைவர் மோகன் கார்த்திக், துணை தலைமை நிதி அதிகாரி ஆர்.கே.சுரேஷ் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
