வணிக வளாகத்துடன் மந்தைவெளி பேருந்து முனையம்: ரூ.151 கோடிக்கான ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

0
113

சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில், ரூ.151 கோடி மதிப்பில் சில்லறை மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய நவீன மந்தைவெளி பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் இணைந்து சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. இந்த நிறுவனம் ரூ.151 கோடி மதிப்பில் மந்தைவெளி பேருந்து முனையம் மற்றும் பணிமனையில் நவீன சொத்து மேம்பாட்டு கட்டிடத்துக்கான ஒப்பந்தத்தை கோரியுள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3-வது வழித்தடத்தில் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையமான மந்தைவெளி மெட்ரோ நிலையத்தின் நுழைவு, வெளியேறும் கட்டமைப்புகள், தற்போதைய மந்தைவெளி பேருந்து நிலையம் மற்றும் பணிமனை வளாகத்துக்குள் திட்டமிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: மெட்ரோ கட்டமைப்பும் பேருந்து நிலையமும் ஒருங்கிணைந்த பன்முக போக்குவரத்து வசதிகளுடன் கூடிய இந்த கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 29,385 சதுர மீட்டர் ஆகும். இதில் 2 கட்டிடங்கள் அமையவுள்ளன. இந்த கட்டிடங்களின் மாடியிலும் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி சாதனங்கள் அமைக்கப்படும். ராமகிருஷ்ண மடம் சாலை மற்றும் அதனுடன் உள்ள இணைப்பு சாலைகளிலிருந்து இருமுக சாலை அணுகுமுறையை பெறும் வகையில் இவை அமைக்கப்படுகின்றன.

இரு கட்டிடங்களிலும் 2 கீழ் தளங்கள் கொண்ட வாகன நிறுத்துமிடங்களில் மொத்தமாக 502 இருசக்கர வாகனங்கள், 105 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தும் வசதி கிடைக்கும். தரைத்தளத்திலிருந்து 7-வது தளங்கள் வரை வணிக, அலுவலக இடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் பெரு நிறுவன அலுவலகங்கள், வரவேற்பு ஓய்வறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பிரத்யேக இடங்களும் அமைய உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here