சிவசேனா (உத்தவ்) கட்சியின் அதிகாரப்பூர்வ ‘சாம்னா’ நாளிதழில் ஒரு தலையங்கம் வெளியாகியுள்ளது.
அதில், “காங்கிரஸ் மற்றும் தேசத்தின் உச்ச தலைவராக மகாத்மா காந்தி இருந்தார். காந்திக்கு ஒரு உள் குரல் இருந்தது. அது, அவரது முடிவுகளை வழி நடத்தியது. ஆன்மீகம், தேச பக்தி மற்றும் தன்னலமின்மையால் அம்முடிவுகள் கூர்மைப்படுத்தப்பட்டன.
இன்று, காங்கிரஸுக்குள் பல ‘உள் குரல்கள்’ உருவாகி குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இது நாட்டுக்கு ஆரோக்கியமானது அல்ல. தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இந்த உள் குரல்கள் குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளன. மணி சங்கர் அய்யர், சஞ்சய் பாரு உள்ளிட்டோரின் கருத்துகள் சிரமமான நேரத்தில் வெளிவந்து, காங்கிரஸ் விவகாரங்களை சிக்கலாக்குகின்றன” என கூறப்பட்டுள்ளது.
இண்டியா கூட்டணியின் தலைமை பொறுப்பை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகர் சஞ்சய் பாரு அண்மையில் கூறியிருந்தார். “இண்டியா கூட்டணியை ஒருங்கிணைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் சிறந்த மனிதர்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்துகளுக்கு ‘சாம்னா’ தனது தலையங்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளது.














