மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், மாளவிகா பன்சோட் ஆகியோர் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய், கனடாவின் பிரையன் யாங்கை எதிர்த்து விளையாடினார். இதில் பிரணாய் 21-12, 17-21, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்த சுற்றில் பிரணாய், போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள சீனாவின் ஷி ஃபெங் லுயை எதிர்கொள்கிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மாளவிகா பன்சோட் 21-15, 21-16 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் கோ ஜின் வெய்யை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்தார். கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, துருவ் கபிலா ஜோடி தங்களது முதல் சுற்றில் 21-13, 21-14 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் சுங் ஹியூன் கோ, ஹை வோன் ஈயோம் ஜோடியை வீழ்த்தியது.
அதேவேளையில் மற்றொரு இந்திய ஜோடியான ஆத்யா வரியாத், சதீஷ் குமார் 21-13 21-15 என்ற நேர் செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த அம்ருதா பிரமுதேஷ், ஆஷித் சூர்யா ஜோடியை தோற்கடித்து கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் கால்பதித்தது. மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின்
ருதபர்ணா-ஸ்வேதபர்ணா பாண்டா ஜோடி 17-21, 10-21 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் பென்யாபா-நுன்டகர்ன் ஐம்சார்ட் ஜோடியிடம் வீழ்ந்தது.














