மலையாள திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்துக்கு நடிகர் சங்கமான ‘அம்மா’ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கேரள தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், கேரள திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகளின் கூட்டுக்கூட்டத்தில், நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வலியுறுத்தியும், பொழுதுபோக்கு வரி உயர்வைக் கண்டித்தும் ஜூன் 1-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது படப்பிடிப்புகள் நடைபெறாது, திரையரங்குகள் மூடப்படும், சினிமா தொடர்பான எந்த நிகழ்வும் நடைபெறாது என கேரள திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சுரேஷ்குமார் அறிவித்துள்ளார். இதற்கு அந்தோணி பெரும்பாவூர் உட்பட சில தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ் கோபி, டோவினோ தாமஸ் உட்பட மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வின் உறுப்பினர்கள் பலர், கொச்சியில் நேற்று முன் தினம் ஆலோசனை நடத்தினர். தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், அதற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மலையாள தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்ட வேலைநிறுத்தத்துக்கு ‘அம்மா’ ஆதரவு கொடுக்காது. கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் திரைப்படத் துறை, சிலரின் பிடிவாதத்தால் தேவையற்ற வேலைநிறுத்தத்துக்கு இழுக்கப்படுவது, பல தொழிலாளர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.