நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி

0
171

மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் முழுமையாக தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி, கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக் கோரி 16 மாணவர்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4-ம் தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக்கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 2 மாணவர்களும், கே கே நகர் பத்ம சேஷாத்திரி மாணவர் ஒருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்களில், கடந்த மே 4-ம் தேதி நடந்த தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை உயர் நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தியதில், நீட் தேர்வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிய வந்ததாகவும், மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது என தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன், தீர்ப்புக்காக இன்று (ஜூன் 6) தள்ளிவைத்திருந்தார். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, மத்திய அரசு நடத்திய விசாரணையில் எடுக்கப்பட்டுள்ள முடிவு நியாயமானது என்றும் 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் அது தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here