கோயில் நில அபகரிப்பு வழக்கில் விடுவிக்க கோரி மு.க.அழகிரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி

0
142

தயா பொறியியல் கல்லூரிக்காக கோயில் நிலத்தை அபகரித்ததாக பதியப்பட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்துள்ள உயர் நீதிமன்றம், போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சராக பதவி வகித்த மு.க.அழகிரி, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரியை கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கினார். இந்தக் கல்லூரிக்காக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான 44 சென்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக மு.க.அழகிரி உள்ளிட்ட 7 பேர் மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2014-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் நில அபகரிப்பு பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்ச்சி காரணமாக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது என்றும், எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனக்கோரியும் மு.க.அழகிரி தாக்கல் செய்திருந்த மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கெனவே தள்ளுபடி செய்தது. மேலும் 16 வாரங்களில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென விசாரணை அதிகாரிக்கும் உத்தரவிட்டிருந்தது.

அதையடுத்து இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி அழகிரி மதுரை மாவட்ட நில அபகரிப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து மட்டும் அழகிரியை விடுவித்து கடந்த 2021-ம் ஆண்டு உத்தரவிட்டது. அழகிரிக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில் மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மதுரை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மறுஆய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். அதேபோல தனக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கில் இருந்து தன்னை முழுமையாக விடுவிக்கக்கோரி மு.க.அழகிரியும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு பி்ன்னர் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த இரு மனுக்களையும் விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், மு.க.அழகிரிக்கு எதிராக நில அபகரிப்பு பிரிவு போலீஸார் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை ஏற்று, போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து அழகிரியை விடுவித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். அதேபோல இந்த வழக்கில் இருந்து தன்னை முழுமையாக விடுவிக்கக்கோரி அழகிரி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here