உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில், லக்னோ பல்கலைக் கழகம் செயல்படுகிறது. இதனுள் நசிருதீன் ஹைதர் என்பவரால் 1,800-ம் ஆண்டு கட்டப்பட்டலால் பாராதாரி எனும் கட்டிடம் உள்ளது. இதனை மசூதியாக கருதி பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் இதனுள் தொழுகை நடத்தி வருகின்றனர்.
இக்கட்டிடம் இடியும் நிலையில் இருப்பதாக கூறி கடந்த பிப்ரவரி 23-ல் லக்னோ மாநகராட்சியால் மூடப்பட்டது. அதே பல்கலையில் உள்ள மற்றொரு மசூதியில் தொழுகை நடத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. இதை எதிர்த்து முஸ்லிம் மாணவர்கள் பல்கலை வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தடையை மீறி தொழுகை நடத்திய 13 மாணவர்கள் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்குப் பதிவானது. இதனால் முஸ்லிம் மாணவர்கள் மறுநாள் போராட்டத்தை வலுப்படுத்தினர். இவர்களுக்கு எதிராக பல்கலை.யின் பஜ்ரங்தளம் உள்ளிட்ட இந்துத்துவா ஆதரவு மாணவர்கள் போராட்டக் குரல் எழுப்பினர்.
இதனால் இரு தரப்பு மாணவர்கள் இடையே மோதல் சூழல் உருவானது. மூன்றாவது நாளான நேற்று, மீண்டும் மூடப்பட்ட மசூதியின் தடுப்புகளை மீறி தொழுகை நடத்தப்பட்டது. இதற்கு சமாஜ்வாதி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் மனித சங்கிலி அரண் அமைத்து பாதுகாப்பு அளித்தனர்.
இதனால், லக்னோ பல்கலை வளாகத்தில் பதற்றம் அதிகரித்து வருகிறது. வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலைமையை போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மசூதி மூடலுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்துக்கு லக்னோ அரசியல் தலைவர்களும் ஆதரவளிக்க தொடங்கியுள்ளனர்.














