Home மாநில செய்திகள் திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் ரூ.3.34 லட்சம் கோடி முதலீடு இழப்பு: அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சியில் ரூ.3.34 லட்சம் கோடி முதலீடு இழப்பு: அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

0

திமுக ஆட்சியில் ரூ.3.34 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழகம் இழந்துள்ளதாக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா விளக்கமளித்துள்ளார்.

இதுதொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகத்துக்கு வரவேண்டிய 25 முக்கிய முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.3.34 லட்சம் கோடியாகும். இதனால் 2 லட்சத்து 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர்.

டாடா செமிகண்டெக்டர், சுசூகி மோட்டார், ஜே.எஸ்.டபிள்யூ, டொயோட்டா போன்ற முன்னணி நிறுவனங்களின் முதலீடுகள் குஜராத், ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்குச் செல்ல கடந்த கால நிர்வாக குறைபாடுகளும், ஊழலும்தான் காரணம்.

ஆனால் இன்றைக்கு தவெக அரசு பொறுப்பேற்ற பின், முதலீடுகள் ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கு செல்வதாக பொய் பிரச்சாரங்களை செய்துவருகின்றனர்.

அப்பல்லோ டயர்ஸ் நிறுவனம் ஆந்திராவில் மேற்கொள்ளும் முதலீடு 2016-ல் அறிவிக்கப்பட்ட ஒரு பழைய திட்டமாகும். அதேநேரம் `கிரீன் ஃபீல்ட்’ திட்டத்துக்காக தென் தமிழகத்தில் நிலம் தேர்வு செய்யும் பணியை அப்பல்லோ நிறுவனம் தற்போது தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் ஏற்கெனவே 4 உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனம், இடர் குறைப்பு உத்தியின் ஒரு பகுதியாகவே ஆந்திராவில் 5-வது ஆலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

கூகுள் டேட்டா சென்டர் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பரந்த வறண்ட நிலங்கள் மற்றும் நீர் பயன்பாட்டு வசதி போன்ற காரணங்களால் மட்டுமே அங்கு முதலீடு செய்துள்ளது.

அதானி குழுமத்தின் ஹைட்ரோ ஸ்டோரேஜ் திட்டம் வேலூர், நெல்லையில் செயல்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவன திட்டம் குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. அந்த வகையில் எந்தத் திட்டமும் தமிழகத்திலிருந்து வெளியேறவில்லை என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version