அர்ஜெண்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி மற்றும் அவரது அணியினர் ‘கோட் இந்தியா டூர்’ எனும் பெயரில் இன்று (13-ம் தேதி) முதல் 3 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.
மெஸ்ஸி, இந்தியாவுக்கு வருகை தருவது இது 2-வது முறையாகும். கடைசியாக அவர், கடந்த 2011-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச நட்புரீதியிலான கால்பந்து போட்டியில் பங்கேற்றிருந்தார்.
ஆனால் இம்முறை மெஸ்ஸி முற்றிலும் வணிக ரீதியிலான அடிப்படையில் கொல்கத்தா, ஹைதராபாத், மும்பை மற்றும் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். கொல்கத்தாவில் இன்று காலை 9.30 மணிக்கு ரசிகர்களுடன் நடைபெறும் சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தொடர்ந்து விஐபி சாலையில் உள்ள பூமி கடிகார கோபுரத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள தனது 70 அடி உயர சிலையை மெஸ்ஸி திறந்து வைக்கிறார்.
இந்த சிலையை தான் தங்கியுள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்தபடியே காணொலி வாயிலாக மெஸ்ஸி திறந்து வைக்க உள்ளார். இது உலகில் மெஸ்ஸிக்காக அமைக்கப்படும் மிக உயரமான சிலையாகும். தொடர்ந்து சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சிக்காக 75 ஆயிரம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தா நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பிற்பகல் 2 மணிக்கு ஹைதராபாத் செல்கிறார் மெஸ்ஸி.
அங்கு இரவு 7 மணிக்கு ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் 7 பேர் கொண்ட கால்பந்துப் போட்டியில் விளையாடுகிறார். அப்போது இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கு கொண்டு இரவில் மும்பை புறப்பட்டுச் செல்கிறார். 14-ம் தேதி மும்பையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இறுதியாக 15-ம் தேதி டெல்லியில் தனது பயணத்தை நிறைவு செய்கிறார் லயோனல் மெஸ்ஸி. அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். இந்திய வருகையொட்டி மெஸ்ஸிக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.







