இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 5 போட்டி கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வரும் 22-ம் தேதி பெர்த் நகரில் தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான நேதன் லயன் கூறியதாவது:
அஸ்வின் சிறந்த பந்து வீச்சாளர். அடிப்படையில் அவருக்கு எதிராக நான் நேருக்கு நேராக என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை முழுவதும் விளையாடி உள்ளேன். அவரிடம் இருந்து நான் அதிகம் கற்றுக்கொண்டுள்ளேன். அஸ்வின் புத்திசாலித்தனமான பந்து வீச்சாளர், அவரால் மிக விரைவாக கற்றுக்கொள்ளவும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு தகவமைத்துக் கொள்ளவும் முடிகிறது, உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களால் மட்டுமே இதை செய்ய முடியும். அவர் தனது திறமைகளை தனக்கும் தனது அணிக்கும் பயனுள்ள வகையில் பயன்படுத்துகிறார். இதனால் பாராட்ட வேண்டிய இடத்தில் அவரை பாராட்ட வேண்டும்.
2020-21-ம் ஆண்டில் அஸ்வின் சிறந்த பந்து வீச்சாளராக இருந்தார். அவருக்கு தலை வணங்குகிறேன். அவர் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறார். பொதுவாக உங்களுக்கு எதிராக விளையாடும் சிறந்த வீரர்களே, உங்களுடைய சிறந்த பயிற்சியாளர்களாக இருப்பார்கள் என்ற கருத்தில் நம்பிக்கை கொண்டவன் நான். இந்திய சுற்றுப்பயணத்துக்கு செல்வதற்கு முன்னர் அஸ்வினின் பந்து வீச்சு வீடியோக்களை அதிகம் பார்த்துள்ளேன்.
ஆஸ்திரேலியாவில் கூட அவர், எப்படி பந்து வீசியுள்ளார் என்பதையும் வீடியோக்களில் பார்த்துள்ளேன். அதில் இருந்தும் ஏதேனும் கற்றுக்கொள்ள முடியுமா? என்பதை பார்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட்டை வென்றவர்கள் யாரும் கிடையாது. இந்த சிறந்த விளையாட்டில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது, அஸ்வினிடம் இருந்து நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவர் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், அதற்காக அவர் மிகவும் பெருமைப்பட வேண்டும். இவ்வாறு நேதன் லயன் கூறினார்.














