Home மாநில செய்திகள் வழக்கறிஞர்கள் சட்ட வரைவை முழுவதுமாக திரும்ப பெற வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

வழக்கறிஞர்கள் சட்ட வரைவை முழுவதுமாக திரும்ப பெற வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

0

வழக்கறிஞர்கள் சட்ட வரைவை மத்திய அரசு முழுவதுமாக திரும்ப பெற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் நேற்று கூறியுள்ளதாவது: ‘சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் விளக்கு’ என்றார் அண்ணா. வழக்கறிஞர்கள் (திருத்த) சட்ட வரைவு 2025 என்பது சட்டத் துறையின் சுதந்திரம் மீது தொடுக்கப்படும் நேரடி தாக்குதல் ஆகும்.

தேசிய ஆணையம் (NJAC) வழியாக நீதிபதி நியமனங்களை அபகரிக்க முயன்றது, நீதிபதி நியமனங்கள், பணியிட மாற்றங்களில் கொலீஜியத்தின் பரிந்துரைகளை புறந்தள்ளியது என அமைப்புரீதியாக நீதித் துறையின் சுதந்திரத்தை மத்திய பாஜக அரசு கடந்த 2014 முதல் சிதைத்து வருகிறது.

தற்போது பார் கவுன்சில்களின் கட்டுப்பாட்டை தன் கையில் எடுக்க முயற்சிப்பதன் மூலம் சட்டத் தொழிலின் தன்னாட்சியை பறித்து, நீதித் துறையின் சுதந்திரத்தையே பலவீனப்படுத்த பார்க்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலின் பெயரை, மெட்ராஸ் பார் கவுன்சில் என மாற்ற நினைப்பதன் மூலம் பாஜகவுக்கு தமிழ் மீது உள்ள வெறுப்பு தெளிவாக வெளிப்பட்டுள்ளது. தமிழ்நாடு வெறும் பெயர் அல்ல; அது எம் அடையாளம்.

தன்னியல்பாக வெடித்த போராட்டங்கள், கடும் எதிர்ப்புகளால் தற்போது இந்த சட்ட வரைவை திரும்ப பெறும் நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. எனினும், இது மீண்டும் பரிசீலிக்கப்பட்டு, புதிய வடிவில் கொண்டு வரப்படும் என்பது கண்டனத்துக்குரியது. இந்த சட்ட வரைவை முற்றிலுமாக திரும்ப பெற வேண்டும். சட்டத் தொழிலின் தன்னாட்சியை மத்திய அரசு மதிக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version