இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டி 20 கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் கட்டாக்கில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து முலான்பூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது.
இதன் பின்னர் தரம்சாலாவில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த 4-வது ஆட்டம் பனிமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் கடைசி மற்றும் 5-வது டி 20 கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் டி 20 தொடரை 3-1 என கைப்பற்றி கோப்பையை வெல்லும். அதேவேளையில் தோல்வியை சந்திக்க நேரிட்டால் தொடரை 2-2 என சமனில் நிறைவு செய்யும்.
இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், துணை கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோரது பார்ம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. சூர்யகுமார் யாதவ் இந்த ஆண்டில் 20 ஆட்டங்களில் விளையாடி உள்ள போதிலும் ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. 14.20 சராசரியுடன் 213 ரன்களையே சேர்த்துள்ளார்.
இது ஒரு புறம் இருக்க ஷுப்மன் கில் ரன்கள் சேர்க்க தடுமாறுவது இந்திய அணியின் டாப் ஆர்டரை பல வீனமாக்குவதாக அமைந்துள்ளது. அணியின் துணை கேப்டனாக டி 20 வடிவத்துக்கு திரும்பிய ஷுப்மன் கில்லிடம் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான மட்டை வீச்சு இதுவரை வெளிப்படவில்லை. போதாத குறைக்கு தற்போது அவர், காயமும் அடைந்துள்ளார்.
பேட்டிங் பயிற்சியின் போது காலில் காயம் அடைந்த அவர், அகமதாபாத்தில் இந்திய அணியுடன் இணைந்துள்ளார். எனினும் ஷுப்மன் கில் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவாரா? என்பது உறுதி செய்யப்படவில்லை. ஒருவேளை அவர், களமிறங்க முடியாத நிலை உருவானால் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக விளையாடக்கூடும்.
தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் 14 போட்டிகளில் களமிறங்கி 3 சதங்கள், ஒரு அரை சதம் விளாசி உள்ளார். அதேவேளையில் நடுவரிசையில் அவர், சிறந்த செயல் திறனை வெளிப்படுத்தியது இல்லை. நடுவரிசையில் சாம்சன் 8 ஆட்டங்களில் களமிறங்கி 23 சராசரியுடன் 138 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.
இதன் காரணமாகவே தற்போதைய தொடரில் அவர், வெளியே அமரவைக்கப்பட்டுள்ளார். ஒருவேளை இன்றைய ஆட்டத்தில் சாம்சன் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டால் அந்த வாய்ப்பை அவர், சரியாக பயன்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டக்கூடும்.
பந்து வீச்சை பொறுத்தவரையில் தரம்சாலாவில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு இருந்தது. ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே ஆகியோர் பந்து வீச்சிலும் உறுதுணையாக உள்ளனர். அர்ஷ்தீப் சிங் தொடக்க ஓவர்களில் அழுத்தம் கொடுப்பது பலமாக உள்ளது.
சொந்த காரணங்களுக்காக 3-வது போட்டியில் இருந்து விலகியிருந்த ஜஸ்பிரீத் பும்ரா அணியுடன் மீண்டும் இணைந்துள்ளார். இதனால் பந்துவீச்சு பலம் பெறக்கூடும். எனினும் அகமதாபாத் ஆடுகளம் மட்டை வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் வரிசை இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்கக்கூடும்.
தென் ஆப்பிரிக்க அணி இந்த சுற்றுப்பயணத்தில் எதிர்பார்க்காத அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்ற அந்த அணி, ஒருநாள் போட்டித் தொடரை 1-2 என இழந்த போதிலும் அழுத்தம் கொடுத்திருந்தது. இதனால் அந்த அணி இன்று நடைபெறும் கடைசி டி 20 ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சி செய்யக்கூடும்.







