பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு மசூதியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் மூத்த கமாண்டர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் மூத்த கமாண்டர் காரி சயீத் அப்துல் அஜீஸ். ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டர்களில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் குடும்பங்களுக்கு உதவி வழங்கும் லஷ்கர் அமைப்பின் துறைக்கு காரி சயீத் பொறுப்பாளராக இருந்தார்.
இவர் இஸ்லாமாபாத்தில் உள்ள குபா மசூதிக்கு தொழுகைக்காக சென்றுள்ளார். இந்நிலையில், அவர் மசூதியின் நுழைவாயிலில் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்தார். அவரது இறப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவரவில்லை. எனினும், மசூதிக்கு செல்வதற்கு முன்பு, ஒரு உணவகத்தில் சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கும் உயிரிழப்புக்கும் காரணம் உள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
166 பேர் கொல்லப்பட்ட 2008 மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னணியில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த 30 பேர் கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இந்த தகவலை லஷ்கர் தீவிரவாதி ரிஸ்வான் ஹனிஃப் கூறும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியானது.
அல்காய்தா மற்றும் தலிபான்களுடனான தொடர்புகள் காரணமாக 2005-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய ஒரு தீவிரவாதி, இத்தகைய படுகொலைகளை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது இதுவே முதல்முறையாகும். இந்நிலையில்தான் காரி சயீத் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
