பெண்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் வகையிலான தொழிலாளர் வரைவு கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வரும் 2030-ம் ஆண்டுக்குள் பெண்களின் பங்களிப்பை 35 சதவீதமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, இளைஞர்களுக்கான தொழில்முனைவு மற்றும் அதற்கான வழிகாட்டுதல் முயற்சிகளை விரிவாக்கம் செய்வதையும் முக்கிய நோக்கமாக கொண்டு அரசு இந்த வரைவு கொள்கையை தயாரித்துள்ளது.
பல தளங்களை தேடிச் சென்று பார்வையிடுவதற்கு பதிலாக, தொழிலாளர்கள் தங்கள் நன்மைகளை ஒரே தொகுப்பின் கீழ் பார்த்து பயன் பெற உதவும் வகையில் இபிஎப்ஓ, இஎஸ்ஐசி, பிஎம்-ஜெய், இ-ஷ்ரம் மற்றும் மாநில நல வாரியங்களை ஒருங்கிணைத்து ஒரு யுனிவர்சல் சமூகப் பாதுகாப்பை உருவாக்குவதை இந்த வரைவு கொள்கை திட்டம் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
இதேபோல், திறன் இந்தியா, தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டம், பிரதமரின் கவுசல் விகாஸ் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதை ஷ்ரம் சக்தி நிதி 2025 இலக்காக கொண்டுள்ளது. வணிகங்களைப் பொறுத்தவரை, சுய சான்றிதழ் மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட எம்எஸ்எம்இ ரிட்டர்ன்ஸ் உடன் ஒற்றைச் சாளர டிஜிட்டல் இணக்கத்தை இந்த தொழிலாளர் வரைவு கொள்கை முன்மொழிந்துள்ளது.