ஏக்நாத் ஷிண்டேவை பற்றி குணால் கம்ரா பேச்சு: நிகழ்ச்சி நடந்த ஸ்டுடியோவை இடித்த மும்பை மாநகராட்சி

0
155

மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சனம் செய்த நிகழ்ச்சி நடைபெற்ற ஸ்டுடியோ விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி மாநகராட்சி ஊழியர்கள் அதை நேற்று இடித்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த குணால் கம்ரா அரசியல் நையாண்டி கலைஞர் ஆவார். இவர் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையாளராகவும் உள்ளார். கடந்த மாதம் மும்பையில் உள்ள ஹேபிடட் ஸ்டுடியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய குணால் கம்ரா, மாநில துணை முதல்வரும் சிவசேனா (ஷிண்டே) தலைவருமான ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என விமர்சனம் செய்தார்.

கடந்த 2022-ம் ஆண்டு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். சுமார் 40 எம்எல்ஏ-க்களுடன் பாஜக கூட்டணியில் சேர்ந்தார். இதைக் குறிப்பிடும் வகையில்தான் கம்ரா விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில், அவருடையே பேச்சு அடங்கிய வீடியோ சமீபத்தில் வெளியானது. ஷிண்டேவை விமர்சனம் செய்த கம்ராவுக்கு சிவசேனா (ஷிண்டே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். கம்ரா மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனிடையே, நேற்று முன்தினம் இரவு மும்பையின் ஹேபிடட் ஸ்டுடியோ மீது ஷிண்டேவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், பிரிஹன்மும்பை மாநகராட்சி ஊழியர்கள் ஹேபிடட் ஸ்டுடியோவின் ஒரு பகுதியை நேற்று இடித்துத் தள்ளினர். விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள், அது பற்றிய விவரங்களை வெளியிடவில்லை. எனினும், இரண்டு ஓட்டல்களுக்கு நடுவே உள்ள இடத்தை ஆக்கிரமித்து இந்த ஸ்டுடியோ கட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

முன்னதாக ஹேபிடட் ஸ்டுடியோ நிர்வாகம் சார்பில் நேற்று காலையில் வெளியிட்ட அறிக்கையில், “குணால் கம்ரா விவகாரத்தால் ஸ்டுடியோ தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கலைஞர்களின் கருத்துக்கு அவர்கள்தான் முழு பொறுப்பு. இதில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், எங்கள் ஸ்டுடியோ மீது நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. எனினும், கம்ராவின் கருத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என கூறப்பட்டிருந்தது.

முதல்வர் பட்னாவிஸ் உறுதி: இதனிடையே, துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த குணால் கம்ரா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here