கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு உணவுக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் டெம்போக்களில் ஏற்றி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பன்றிப் பண்ணைகளுக்கு உணவாக இவை கொண்டு வரப்படுவதாக தெரிகிறது. பன்றிப் பண்ணைகளுக்கு கொண்டு வரப்படும் உணவுக் கழிவுகளை பொதுமக்கள் சிறைப்பிடிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று (பிப்.9) பகலில் ஒரு மினி டெம்போ திருவரம்பு பகுதியில் துர்நாற்றம் வீசிய நிலையில் சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தை தடுத்து நிறுத்திய பொதுமக்கள் திருவட்டாறு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து டெம்போ டிரைவரை விசாரணை நடத்தியதில் அவர் பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் என்பது தெரியவந்தது. உணவுக் கழிவுகளை பிணந்தோடு பகுதியில் செயல்படும் பன்றிப் பண்ணைக்கு கொண்டு செல்வதாக டிரைவர் தெரிவித்தார். இதையடுத்து டிரைவரை திருவட்டாறு காவல்துறை அழைத்துச் சென்று போலீசார் மேலும் விசாரணை நடத்தியதில் உணவுக் கழிவு குமரி மாவட்ட ஹோட்டல்களில் சேகரித்தவை என தெரியவந்தது.














