குமரி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் இரா. அனிதா அறிவுரைப்படி, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு நீக்கும் சித்த மருத்துவ பஞ்ச கட்டி கஞ்சி பற்றிய விழிப்புணர்வு முகாம் குருந்தன் கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று(டிச.3) நடந்தது. ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செந்பகவல்லி தலைமை வகித்தார்.
வெள்ளிச்சந்தை ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் அனிதா ஊட்டச்சத்து குறைந்த மற்றும் எடை குறைந்த குழந்தைகளுக்கு வீட்டிலேயே சுத்தமாக எளிமையாக பச்சரிசி, உளுந்து, பச்சை பயறு, கடலை பருப்பு, துவரம் பருப்பு இவைகளை துணியில் முடித்து கொதிக்க வைத்த கஞ்சியை கொடுத்தால் எடை அதிகரிப்பதோடு அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் என கூறினார். இந்த கஞ்சி தயாரிப்பது குறித்த பிரசுரங்களும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.














