குளச்சல் சப் இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையிலான போலீசார் நேற்று (21-ம் தேதி) குளச்சல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாலப்பள்ளம் பகுதியில் ஒரு பள்ளி அருகில் சந்தேகத்திற்கிடமாக 4 வாலிபர்களை துரத்தி சென்று பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்ற மூன்று பேர்களையும் பிடித்து மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது சிறு பொட்டலங்களில் 75 கிராம் கஞ்சா, 2.5 கிராம் மெத்தம்பெட்டமைன் இருந்ததை கண்டுபிடித்தனர். தொடர் விசாரணையில் பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருளை விற்பனை செய்தது அம்பலமானது.
பிடிபட்டவர்கள் மங்கலக்குன்று ஷாஜி (22), பாலப்பள்ளம் மெர்லின் அனி (24) வாணியக்குடி வின்செல் நிஜோலின் (23) என்பது தெரிய வந்தது. போலீசார் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து, 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து தப்பி ஓடிய சகாய அஜிஸ் என்பவரை தேடி வருகின்றனர். தொடர்ந்து மூவரையும் நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு இந்த போதைப் பொருளை சப்ளை செய்தது யார் என விசாரணை நடைபெற்று வருகிறது.














