தீபாவளிக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவு தொடக்கம்

0
265

தீபாவளி பண்டிகை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 25 படுக்கைகள் கொண்ட சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவில் ஆண்களுக்கு 12 படுக்கைகள், பெண்களுக்கு 8 படுக்கைகள், குழந்தைகளுக்கு 5 படுக்கைகள் என மொத்தம் 25 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு சிகிச்சை வார்டை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பாதுகாப்பாகப் பட்டாசுகள் வெடிப்பது தொடர்பாக தமிழ்நாடு தீயணைப்புத் துறையின் சார்பில் மருத்துவமனையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அதேபோல், இந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரமும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை டீன் லியோ டேவிட், தீக்காய சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் நெல்லையப்பர், மருத்துவமனை கண்காணிப்பாளர் பாஸ்கரன், நிலைய மருத்துவ அலுவலர் வாணி, அண்ணாநகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கே.மோகன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண்டுதோறும் சூடு தீக்காயங்கள், மின் தீக்காயங்கள், ஆசிட் காயங்கள், பட்டாசுகளினால் ஏற்படும் தீக்காயங்கள், ரசாயன தீக்காயங்கள் என்று பல்வேறு காரணங்களால் 2,000 பேர் வரை பயன்பெற்று சென்று கொண்டிருக்கிறார்கள். தீபாவளி பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காயங்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்திருக்கிறது.

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை 100 ஆண்டுக்கால பெருமைக்குரிய ஒரு மருத்துவமனை ஆகும். அனைத்து மருத்துவமனைகளும் சிஎஸ்ஆர் நிதியுதவி பெற்று மேம்படுத்தப்பட்டு வருகின்றன, அந்த வகையில் இந்த மருத்துவமனைக்கும் சிஎஸ்ஆர் நிதியுதவி பெற்று மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இம்மருத்துவமனை தனியாருக்கு தாரைவார்க்கப்படாது. தன்னார்வலர்களுக்கு தத்துக்கொடுக்கவும் படமாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here