அகமதாபாத் விமான விபத்தில் இறந்த கேரள செவிலியர் உடல் தகனம்

0
229

அகமதாபாத் விமான விபத்தில் இறந்த கேரள செவிலியரின் உடல் நேற்று அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 12-ம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அதில் பயணித்தவர்கள், மருத்துவ மாணவர்கள், பொதுமக்கள் என 247 பேர் உயிரிழந்தனர்.

இறந்தவர்களில் விமானத்தில் பயணித்த கேரள செவிலியர் ரஞ்சிதா நாயரும் (37) ஒருவர். அவரது உடல் டிஎன்ஏ பரிசோதனை மூலம் 11 நாட்களுக்கு பிறகு அடையாளம் காணப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை விமானம் மூலம் திருவனந்தரபுரம் கொண்டு வரப்பட்டு, பிறகு சாலை வழியாக பத்தனம்திட்டா மாவட்டம், திருவல்லா அருகில் உள்ள புல்லாட் கிராத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவர் படித்த பள்ளியில் வைக்கப்பட்டது. அமைச்சர்கள் வி.எஸ்.சிவன்குட்டி, வி.என்.வாசவன் உள்ளிட்ட ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிறகு அவர் உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மாலை 4 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.

லண்டன் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்த ரஞ்சிதா மீண்டும் கேரள அரசுப் பணியில் சேர முடிவு செய்தார். இந்த நடைமுறைகளை முடித்துக் கொண்டு தனது வேலையை ராஜினாமா செய்வதற்காக லண்டன் சென்றபோது விபத்தில் சிக்கினார். சொந்த ஊரில் புதிதாக கட்டிவரும் வீட்டில் தனது 2 குழந்தைகள் மற்றும் தாயுடன் வாழும் அவரது கனவு கைகூடிவந்த நிலையில் மரணம் அவரை இழுத்துச் சென்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here