கெனிஷா எச்சரிக்கை: ஆன்லைன் ‘தாக்குதல்’களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

0
263

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி பிரிவு விவகாரத்தில் தன் மீது தொடுக்கப்படும் ஆன்லைன் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், சட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளார் பாடகி கெனிஷா.

இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “அனைத்து வசவாளர்களுக்கும்: கெனிஷாவின் வழக்கறிஞர் குழுவில் இருந்து” என்று தலைப்பிட்டு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் பாடகி கெனிஷா ஆன்லைனில் தொடர்ச்சியாக கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை மிரட்டல், ஆபாச குறுஞ்செய்திகள் உள்ளிட்ட தாக்குதல்களால் குறிவைக்கப்படுவதால் அவர் மனரீதியான அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாகவும், இதனால் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மிரட்டல்கள் தொடர்பான ஸ்க்ரீன்ஷாட்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் சட்டத்தின் முன் சமர்ப்பிக்கப்படும் என்றும், அடுத்த 48 மணி நேரத்துக்குள் கெனிஷா குறித்த அவதூறுகள், வீடியோக்கள், போட்டோக்கள், ஆபாச பின்னூட்டங்கள் உள்ளிட்டவற்றை நீக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் ரவி மோகன் தனது சமூக வலைதளத்தில் அறிவித்தார். நீண்ட கால யோசனை மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான தனது திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அவர் கூறியிருந்தார்.

ரவி மோகன் – ஆர்த்தி ரவி பிரிவுக்கு காரணம் பாடகி கெனிஷா என்று பலரும் கூறிய நிலையில் ரவி மோகன் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில், அண்மையில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில் கெனிஷாவும் ரவிமோகனும் ஜோடியாக வருகை தந்தனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாக பரவியது.

இதனையடுத்து ரவி மோகன் – ஆர்த்தி இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு ஒருவர் மீது ஒருவர் குற்றம்சுமத்தி வந்தனர். தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க மனைவி ஆர்த்திக்கு தடை விதிக்க கோரி நடிகர் ரவி மோகன் அண்மையில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இரு தரப்பினரும் அவதூறு கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here