கருங்கல் அருகே தெருவுக்கடை பகுதியில் ஒரு ஆட்டோவில் நேற்று (4-ம் தேதி) டிரைவர் ஒருவர் இறந்து கிடப்பதாக கருங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்தபோது பிணமாக கிடந்தவர் மாற்றுத்திறனாளி என தெரிய வந்தது. விசாரணையில் அவர் கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (48) என்று தெரிந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இவர் நேற்று கருங்கல் – தேங்காபட்டணம் சாலையில் தெருவுக்கடை பகுதியில் உள்ள வேகத்தடையில் கவனிக்காமல் வேகமாக வந்ததால் நிலைதடுமாறி ஆட்டோ கவிழ்ந்துள்ளது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது டிரைவர் ஆட்டோவில் சிக்கியிருந்தார். பொதுமக்கள் முத்துக்குமாரை மீட்டு தண்ணீர் கொடுத்து அவரை தூக்கி விட்டனர். அப்போது அவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
பின்னர் முத்துக்குமார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று சுமார் அரைக் கிலோமீட்டர் தூரம் ஆட்டோ ஓட்டிய நிலையில் தலைசுற்றல் ஏற்பட்டதால் அவர் ஆட்டோவின் பின் சீட்டில் சென்று படுத்து பரிதாபமாக இறந்தது தெரிய வந்தது. போலீசார் மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.














