கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்

0
121

தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.

முன்னாள் முதல்வர் கருணாநிதி – பத்மாவதி தம்பதிக்கு 1948-ம் ஆண்டு மகனாக பிறந்த மு.க.முத்து 1970-களில் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். ‘பிள்ளையோ பிள்ளை’, ‘சமையல்காரன்’, ‘அணையாவிளக்கு’, ‘இங்கேயும் மனிதர்கள்’ ‘பூக்காரி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தான் நடித்த படங்களில் சில பாடல்களையும் பாடியிருக்கிறார். திமுக மேடைகளிலும் கட்சியின் கொள்கை விளக்க பாடல்களை பாடியுள்ளார்.

எம்.ஜி.ஆருக்கு போட்டியாக சினிமாவில் களமிறக்கப்பட்டவர் என்ற பொதுவான கருத்து நிலவினாலும், மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்து கிளாப் அடித்து எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். கடந்த 2006-ஆம் ஆண்டு தேவா இசையில் ’மாட்டுத் தாவணி’ என்ற படத்தில் ஒரு பாடல் பாடியிருந்தார் மு.க.முத்து.

இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மு.க.முத்து சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 19) காலமானார். அவரது உடல் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

மு.க.முத்துவின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மு.க.முத்துவின் மறைவையொட்டி முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவிருந்த அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here