கருண் நாயர் 186*, சர்பராஸ் கான் 92 – ‘இந்தியா ஏ’ ஒரே நாளில் 409 ரன்கள் குவிப்பு!

0
201

காண்டர்பெரியில் இந்தியா ஏ அணிக்கும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கும் இடையே நேற்று தொடங்கிய முதல் அன் அஃபிசியல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் கருண் நாயர் 186 ரன்கள் குவித்து நாட் அவுட்டாகத் திகழ ‘இந்தியா ஏ’ அணி ஒரே நாளில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 409 ரன்களைக் குவித்தது .

ஜூன் 20-ம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தான் இடம்பெற வேண்டும் என்பதை கருண் நாயரின் அதிரடி இன்னிங்ஸ் வலியுறுத்தியுள்ளது. அவர் 246 பந்துகளில் 24 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 75.60 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் இந்த ஸ்கோரை எடுத்துள்ளார். ஏற்கெனவே இங்கிலாந்துக்கு எதிராக நம் சென்னையில் 300 ரன்களை அடித்தவர் கருண் நாயர். துரதிர்ஷ்டவசமாக அவர் ஒழிக்கப்பட்டு இப்போது பெரிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளார்.

டெஸ்ட் அணியிலிருந்து ஒழிக்கப்பட்ட சர்பராஸ் கான் 119 பந்துகளில் 92 ரன்களை எடுத்தார். சர்பராஸ் கான், கருண் நாயர் இடையே 181 ரன்கள் பார்ட்னர்ஷிப் மலர்ந்தது. இதை 39 ஓவர்களில் இருவரும் சாதித்தனர். முன்னதாக, ஜெய்ஸ்வால் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 24 ரன்கள் எடுத்து பொறுமை இல்லாமல் ஷாட் அடிக்கப் போய் ஆட்டமிழந்தார். கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் ஹுல் பந்தில் எல்.பி ஆகி 8 ரன்களில் வெளியேறினார்.

துருவ் ஜுரெல் 104 பந்துகளில் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 84 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்கிறார். கருண் நாயர் இன்னிங்ஸின் ஹைலைட் என்னவெனில் டெஸ்ட், டி20 கலவையாகும். கட் ஷாட்கள், அப்பர் கட்கள், நிறைய ரிவர்ஸ் ஸ்வீப்கள், புல் ஷாட், இன்சைட் அவுட் ட்ரைவ்கள் என்று அசத்தி 24-வது முதல் தர கிரிக்கெட் சதத்தை அடித்தார். ஆனால், லயன்ஸ் பந்துவீச்சு வரிசை அனுபவமற்றது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். 89 ரன்களில் கருண் நாயருக்கு கேட்ச் விடப்பட்டது.

ஆனால், சதம் எடுத்தவுடன் பெரிய கொண்டாட்டமெல்லாம் மேற்கொள்ளாமல் அமைதியாக மட்டையை உயர்த்தினார். சர்பராஸ் கான் கள வியூகத்தின் இடைவெளிகளை பிரமாதமாகப் பயன்படுத்தி ஆடினார். துருவ் ஜுரெல் தனக்கென உரிய பாணியில் அடிக்க வேண்டிய பந்துகளை அடித்து ஆடினார்.

ஆனால், தனிச்சிறப்பு ஆட்டத்திறன் என்றால் அது கருண் நாயர் தான். இன்று இரட்டைச் சதம் அடிப்பாரா என்பதுதான் ரசிகர்களின் ஆர்வமாக இருக்கிறது. கருண் நாயர் ஒரு உதாரணமாகத் திகழ்கிறார். அதாவது அணியிலிருந்து நீக்கப்பட்டாலும் மீண்டும் கடும் உழைப்பினால் தவிர்க்க முடியாத ஒரு வீரராக உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற அவரது தீரா அர்ப்பணிப்பு அவரை இன்று இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.

எனவே அணியில் இடம் பெறாமல் போகிறோம் என்று மனச்சோர்வு அடைந்து விரக்தி அடையாமல் தொடர் முயற்சி பலனளிக்கும் என்பதன் வாழும் உதாரணமாகத் திகழ்கிறார் கருண் நாயர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here